Published : 13 Jan 2023 07:38 AM
Last Updated : 13 Jan 2023 07:38 AM
சென்னை: இந்திய அஞ்சல் துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து, கூட்டு பார்சல் விநியோக முறையைத் தொடங்கி உள்ளது. அதன்படி, 35 கிலோவுக்கு மேற்பட்ட எடையிலான பார்சலை வாடிக்கையாளரின் இருப்பிடத்தில் இருந்து பெற்று, ரயில் நிலையத்துக்கு அனுப்பப்படும்.
பின்னர், ரயிலில் பார்சல் எடுத்து சென்று குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இறக்கப்படும். அந்த ரயில் நிலையத்திலிருந்து, அதனைப் பெற்று, வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கே கொண்டு விநியோகம் செய்யும் பணியை அஞ்சல் துறை மேற்கொள்ளும்.
இந்த கூட்டு பார்சல் விநியோக சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் 3-ம்நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பார்சலைப் பெற்றுக்கொண்டது முதல் அதை விநியோகம் செய்யும் வரை வாடிக்கையாளருக்கான தொடர்பு அலுவலகமாக இந்திய அஞ்சல் துறை இருக்கும்.
சென்னை நகர பிராந்தியத்தில் இத்திட்டத்தின்கீழ் ராணிப்பேட்டையிலிருந்து திருமானூருக்கு பார்சல் கடந்த மாதம் 7-ம் தேதிஅனுப்பப்பட்டது. ராணிப்பேட்டையில் பெறப்பட்ட அந்த பார்சல் திருச்செந்தூர் விரைவு ரயில் மூலம் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. பின்னர், அந்த பார்சல் வாடிக்கையாளரின் இருப்பிடத்தில் மறுநாள் விநியோகம் செய்யப்பட்டது.
இச்சேவையை பெற விரும்புவோர் உதவி இயக்குநர், (வர்த்தக மேம்பாடு) சென்னை நகர பிராந்தியத்தில் உள்ள உதவி இயக்குநரை அணுகலாம். அல்லது 044 -2859 4761,044 -2859 4762 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் bd.chennaicity@indiapost.gov.in என்ற இணையதளத்தைக் காணலாம். இத்தகவலை சென்னை நகர தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT