

தமிழகத்தில் இயற்கை வளங்கள் விற்பனையை முறைப்படுத்துவதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றின் பலன்கள் அரசுக்கும், அரசின் மூலமாக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களின் ஊழல் காரணமாக அதன் பயன்கள் தனியாரின் கஜானாவுக்கு செல்கின்றன.
தமிழ்நாட்டில் சேகர் ரெட்டி தொடங்கி தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வரை ஏராளமானோரின் வீடுகளில் வருமானவரித் துறையினரும், மத்திய புலனாய்வுப் படையினரும் அதிரடி சோதனை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு காரணம் ஆற்று மணல் கொள்ளை தான்.
கடந்த 13 ஆண்டுகளில் சுமார் ரூ. 5 லட்சம் கோடிக்கு நுகர்வோருக்கு மணல் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் மூலம் அரசுக்கு கிடைத்துள்ள மொத்த வருமானம் சுமார் ரூ.2000 கோடி மட்டுமே.
அதாவது, மணல் விற்பனையில் அரசுக்கு கிடைத்த வருமானத்தை விட 250 மடங்கு அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது. அரசுக்கு வர வேண்டிய வருமானம் கடந்த 13 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த ஊழல் ஆட்சியாளர்களுக்கும், மணல் கொள்ளையர்களுக்கும் சென்றிருக்கிறது.
ஆற்று மணல் மட்டுமின்றி தாது மணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்களும் தடையின்றி கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன. 2002 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.60 லட்சம் கோடி மதிப்புள்ள தாது மணல் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 75 விழுக்காடு தாது மணல் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் அவற்றை ஒட்டியுள்ள கேரள கடற்கரைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அணுசக்தித் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் தாது மணல் ஊழலை பாமக அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து அதுகுறித்து இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. அக்குழு இரு கட்டங்களாக விசாரணை முடித்து 3 ஆண்டுகளாகியும் அக்குழுவிடமிருந்து ஓர் அறிக்கையை மட்டும் பெற்றுக் கொண்ட அரசு இன்னொரு அறிக்கையை வாங்க மறுக்கிறது. பாமக உள்ளிட்ட கட்சிகள் பலமுறை வலியுறுத்தியும், சென்னை உயர் நீதிமன்றம் பல முறை ஆணையிட்டும் இன்று வரை அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.
அதேபோல், கிரானைட் கொள்ளை குறித்த விவரங்களையும் பாமகதான் அம்பலப்படுத்தி, அதுகுறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து தொடரப்பட்ட பொதுநலவழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கிரானைட் ஊழல் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்தது. ஓராண்டு விசாரணைக்குப் பிறகு சுமார் 1.06 லட்சம் கோடிக்கு கிரானைட் கற்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது.
அதுகுறித்து தமிழக அரசின் கருத்தை உயர் நீதிமன்றம் கோரி ஓராண்டுக்கு மேலாகியும் அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. இந்த ஊழல்களில் ஆட்சியாளர்களுக்கு பங்கு இருப்பதால் அதுகுறித்த விசாரணையை அவர்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
நேர்மையான வழியில் வருவாய் ஆதாரங்களை பெருக்குவதும், அதை காத்து பயனுள்ள வழியில் மக்கள் நலனுக்காக செலவு செய்வதும் தான் நல்ல அரசுக்கு இலக்கணமாக இருக்க முடியும். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் இந்த இலக்கணத்திற்கு பாத்திரமானவர்களாக இல்லை.
தமிழகத்தில் இயற்கை வளங்கள் விற்பனையை முறைப்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்ட முடியும். உதாரணமாக, தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு தாதுமணல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அணுசக்தி வாரியம் வகுத்துள்ள விதிகளின்படி தாது மணலை எடுத்து அரசே நேரடியாக விற்பனை செய்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் கோடி வரை எளிதாக வருவாய் ஈட்ட முடியும்.
அதேபோல் ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் கிரானைட் கற்களை குறைந்த அளவில் வெட்டி விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட முடியும்.
ஆற்று மணல் கொள்ளை மூலம் ஆண்டுக்கு ரூ.36,500 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடக்கும் நிலையில், அரசே நேரடியாக மணல் விற்பனையை முறைப்படுத்தி மேற்கொள்வதன் மூலம் ஆண்டுக்கு குறைந்தது ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடியும். மூன்று வகையான இயற்கை வளங்களை அரசே விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கூடுதல் வருவாயை ஈட்ட முடியும். இதைக் கொண்டு அரசின் நேரடிக் கடனான ரூ.2.52 லட்சம் கோடியை 3 ஆண்டுகளில் அடைக்க முடியும்.
பாமகவின் இந்த யோசனை குறித்து பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். இந்த யோசனை சாத்தியமானது என்று வல்லுநர் குழு கருதும் பட்சத்தில் கனிமம் மற்றும் பொதுப்பணித்துறைகளில் உள்ள நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு இயற்கை வள வாணிப ஆணையம் அமைத்து இயற்கை வளங்களை விற்பனை செய்ய அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.