

மதுரை: தமிழ் தெரியாத சமூகம் உருவாகி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.தாரணி பேசினார்.
உயர் நீதிமன்ற கிளையில் எம்பிஎச்ஏஏ மற்றும் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. எம்பிஎச்ஏஏ தலைவர் பி.ஆண்டிராஜ் தலைமை வகித்தார். செயலாளர் டி.அன்பரசு, பெண் வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண் வழக்கறிர்கள் சங்கத் தலைவர் ஜெ.ஆனந்தவள்ளி வரவேற்றார்.
இதில் நீதிபதி தாரணி பேசியதாவது: மொழி அழியும்போது அதில் இருக்கும் முக்கியமான விஷயத்தை இழக்க வேண்டியது வரும். ஆங்கில மோகம் காரணமாக ஆங்கில கல்விக்கு போய்விட்டோம். இப்போது ஆங்கிலம் சரியாக வரவில்லை. தமிழும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் தமிழர் திருநாளை மட்டும் கொண்டாடி வருகிறோம். தமிழ் தெரியாத தமிழ் சமுதாயம் உருவாகி வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
சின்ன சின்ன கதைகள் மூலம் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ் பாடப் புத்தகங்கள் அதுபோல் இல்லை. இதற்காக வழக்கறிஞர்கள் தவறு இல்லாமல் தமிழை எழுதும் போட்டிகளும், பயிற்சி வகுப்புகளும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதி பி.புகழேந்தி உள்ளிட்டோர் பேசினர். எம்பிஎச்ஏஏ துணைத் தலைவர் கே.பி.கிருஷ்ணதாஸ், வழக்கறிஞர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் ஐ.பினேகாஸ், ஏ.பானுமதி ஆகியோர் தொகுத்து வழங்கினர். தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் கே.சாமிதுரை நன்றி கூறினார்.