தேசிய நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு முத்தரசன் கண்டனம்

தேசிய நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு முத்தரசன் கண்டனம்
Updated on
2 min read

தேசிய நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப் போவதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் உயிர் நாடி பிரச்சினையான காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகின்றது.

சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களை கர்நாடக அரசு 1966 முதல் அமுல்படுத்த மறுத்து வருகின்றது.உச்ச நீதிமன்ற உத்தரவின் படி 1990 ல் நடுவர்மன்றத்தை மத்திய அரசு அமைத்தது.

நடுவர் மன்றம் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து விசாரணையை தொடங்கியது. நான்கு மாநிலங்களும் சட்ட வல்லுநர்களைக் கொண்டு தங்களது நியாயங்கள் குறித்து எடுத்துரைத்தன.

தீர விசாரித்து நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை 2007ல் வழங்கியது.நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு காலம் கடத்தியது.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன் விளைவாக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி 2013ல் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அதே காலத்தில், நடுவர் மன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும், ஆனால் மத்திய அரசு அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்தது.

மீண்டும் தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியபோது, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உறுதிபடத் தீர்ப்பளித்தது.இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு தீடீர் என உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என வாதிட்டது.

உச்ச நீதிமன்றம் தனக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்துள்ள நிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்த நிலையில், மீண்டும் மத்திய அரசு தந்திரமான வஞ்சகத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

தேசிய நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப் போவதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசால் இழைக்கப்படும் அநீதிகளில் இதுவும் ஒன்றாகும்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு அப்பட்டமான முறையில் துரோகம் இழைத்து வருகின்றது. அது தொடர்கின்றது. நல்லது செய்வது போல் நாடகம் ஆடி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயல்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தேசிய நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்போகிறோம். அது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகும். அத்தகைய தீர்வுக்காக மேலும் பல பத்தாண்டுகள் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தின் விவசாயத்தை சீரழித்து, பாலைவனமாக மாறவும், தமிழ்நாட்டு மக்கள் குடிநீர் இன்றி பரிதவிக்கும் நிலைமையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே மத்திய அரசின் இம்முடிவு வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்ற அரசியல் குறுகிய உள்நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு செயல்படுகின்றது.

மத்திய அமைச்சரவையின் இம்முடிவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழகம் முனைப்பாக செயல்பட வேண்டும்.

அனைத்து கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்'' என முத்தரசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in