Published : 21 Dec 2016 11:11 AM
Last Updated : 21 Dec 2016 11:11 AM

கோவை புறநகரில் ‘விபத்து அபாயம் மிக்க பகுதி சூலூர்’: தேசிய நெடுஞ்சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த திட்டம்

கோவை புறநகரில் அதிக விபத்து கள் நடக்கும் அபாயப் பகுதியாக சூலூர் பகுதி அறியப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் பாதுகாப்பு கட் டமைப்புகளை ஏற்படுத்த மாவட்ட காவல்துறை திட்டமிட்டுள்ளது.

கோவை புறநகர்ப் பகுதியில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் இறுதி வரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 3800 வழக்கு கள் பதிவாகியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில்தான் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 28 ஆயிரம் பேர் மீதும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 30 ஆயிரம் பேர் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன.

கோவை புறநகர்ப் பகுதி போக்கு வரத்து பிரச்சினைகளை சரிசெய் வது குறித்த காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், ஆபத்து அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள சூலூர், அன்னூர், துடியலூர் பகுதிகளில் விபத்துகளை தடுக்க கூடுதல் வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளன. மாவட்டத்தின் 5 துணைக் கோட்டங்களில் விபத்துகள் அதிகமாக நடக்கும், அச்சுறுத்தல் மிக்க பகுதியாக சூலூர் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சிந்தாமணிபுதூர் சிக்னல், பாப்பம்பட்டி பிரிவு ஆகிய இடங்களில் விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளன. இங்கு ஜனவரி முதல் நவம்பர் வரை விபத்துகளினால் 92 பேர் உயிரிழந்துள்ளனர்; 206 பேர் காயமடைந்துள்ளனர். இது கோவையில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் மிகவும் அதிகம் என்கின்றனர் போலீஸார். இதற்கு அடுத்தபடியாக துடியலூர், அன்னூர் ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

வேக அளவீட்டுக் கருவி

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி கூறும்போது, ‘கோவை மாவட்ட காவல் பகுதியில் பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் குறுக்கிடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மற்ற பகுதிகளைக் காட்டிலும் சூலூரில் ஆண்டுதோறும் இந்த பிரச்சினை அதிகம். 2014-ல் சூலூர் பகுதியில் விபத்துகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 105 ஆகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 244 ஆகவும் இருந்தது. 2015-ல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 237 ஆகவும் இருந்தது. நடப்பு ஆண்டு இந்த எண்ணிக்கை குறைந்தது.

மாநகரைப் போல மாவட்ட புறநகரப் பகுதிகளிலும் வாகன வேக அளவீட்டுக் கருவியைப் பயன்படுத்தி வாகனங்களை தணிக்கைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த கருவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், ஆபத்தான இடங்களில் இரவு நேர ஒளி எதிரொலிப்பான்களை சாலையில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உள்ளோம்’ என்றார்.

இயங்காத சிக்னல்கள்

கோவை புறநகரில் வடவள்ளி, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், கருமத்தம்பட்டி, அன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் சரிவர இயங்குவதில்லை. வடவள்ளி உள்ளிட்ட சில இடங்களில் புதிய சிக்னல்களை அமைத்து பல மாதங்களாகியும் அவை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் விபத்துகளும், வாகன நெரிசலும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நகரில் இருப்பது போல, புறநகரிலும் போக்குவரத்து சிக்னல்களை சரிவர செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x