

சேது சமுத்திர திட்டம்: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்: சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கொண்டு வந்தார். அப்போது முதல்வர் பேசுகையில்,"சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும், இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும், மீனவர்கள் வாழ்வு செழிக்கும். 2004-ம் ஆண்டு ஒன்றிய அளவில் காங்கிரஸ் ஆட்சி மாறி திமுக கூட்டணி ஆட்சி வந்த பிறகு ரூ.247 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் 50% முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது.
சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றால் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. இனியும் இந்த திட்டத்தை செயல்படுத்தவிடால் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதம் இன்றி ஒன்றிய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும். திட்டத்தை செயல்படுத்த தமிழக அனைத்து ஒத்துழைப்பும் வழங்கும்" என்று முதல்வர் பேசினார்.
இந்தத் தீர்மானத்தின் மீது விவாதத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசினர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “முதலமைச்சரின் தீர்மானத்தின் அடிப்படையில் சாதகங்களை பேசி வலு சேர்க்க வேண்டும். ஆதரவு கேட்க வேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்கள் அரசியல் கட்சியினர் தெரிவித்திருப்பார்கள். அதை பேசுவதற்கு இது நேரமல்ல. இந்த திட்டம் வரவேற்க கூடிய ஒன்று. சாதக, பாதகங்களை ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும்” என்றார். பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “ராமர் பாலத்திற்கு சேதம் இல்லாமல், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற பாஜக ஆதரவளிக்கும்” என்று தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்காக 4 புதிய அறிவிப்புகள்: வெளிநாடுகளில் எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “அயலகத் தமிழர் நாளான இன்று சில அறிவிப்புகளை மகிழ்ச்சியோடு நான் அறிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக, தமிழகத்திலிருந்து பல்வேறு காலக்கட்டங்களில், புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.
இரண்டாவதாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும். மூன்றாவதாக, அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நான்காவதாக, அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவுத் தளம் ஒன்று ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - ஐகோர்ட் உத்தரவு: மதுரை அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை சமரசக் கூட்டம் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விலகியது வடகிழக்கு பருவமழை; நீலகிரியில் உறை பனிக்கு வாய்ப்பு:தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து வியாழக்கிழமை விலகியது.
12 மற்றும் 13ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. 14-ம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்’ என்று தெரிவித்துள்ளது.
ஆளுநர் விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் திமுக முறையீடு: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, "குடியரசுத் தலைவரை நாங்கள் சந்தித்தோம். தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9-ஆம் தேதி, அவை மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது பற்றிஅவரிடம் எடுத்துரைத்தோம்" என்றார்
ஜெக்தீப் தன்கரின் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி: “நமது நாட்டில் அனைத்திற்கும் மேலானது அரசியலமைப்புதானே தவிர நாடாளுமன்றம் அல்ல” என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதன்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், நாடாளுமன்றத்தின் இறையாண்மையை நீதித் துறை மதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மீதான தீர்ப்பின்போது, அவை அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என நீதிமன்றங்கள் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தவர், நாடாளுமன்றமே மேலானது என்று குறிப்பிட்டார்.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள ப. சிதம்பரம், ''அனைத்திற்கும் மேலானது நாடாளுமன்றம் என குடியரசுத் துணைத் தலைவர் கூறி இருப்பது தவறானது. அரசியல் சாசனம்தான் அனைத்திற்கும் மேலானது. அடிப்படை கட்டமைப்பு என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் மீது பெரும்பான்மையினரால் நடத்தப்படும் தாக்குதலை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
"உலகின் பெரும்பாலான சவால்கள் தென்பகுதியையே அதிகம் பாதிக்கின்றன": "உலகின் பெரும்பாலன சவால்களை தெற்கு பிராந்திய நாடுகள் உருவாக்கவில்லை. ஆனால் அதன் பாதிப்பை அதிகமாக அந்நாடுகளே சந்திக்கின்றன" என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா நடத்துகின்ற "வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டின்" தொடக்க நிகழ்வில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்," நாம் அனைவரும் மீண்டும் போர், சவால்கள், தீவிரவாதம் மற்றும் புவியியல் பதற்றம், உணவு, உரம், எரிபொருள் விலை உயர்வு போன்ற பெரும் சவால்கள் நிறைந்த ஒரு கடினமான ஆண்டை கடந்து வந்திருக்கிறோம். உலகம் சந்திக்கும் பெரும்பாலன சாவல்கள் தெற்குபகுதி நாடுகளால் உருவாக்கப்படுவதில்லை. ஆனால் அதன் பாதிப்புகளை தெற்கு நாடுகள் தான் அதிகம் சந்திக்கின்றன என்று தெரிவித்தார்.
‘வரலாற்றை இந்தியப் பார்வையில் எழுத வேண்டிய நேரம் இது’: ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டனர். அதனால் இது வரலாற்றை இந்தியப் பார்வையில் எழுத வேண்டிய தருணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த சஞ்சீவ் சன்யாலின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித் ஷா, இந்திய சுதந்திர வரலாற்றில் அஹிம்சைப் போராட்டங்களுக்கு நிறையவே பங்கு இருக்கிறது. ஆனால் இப்போதுள்ள வரலாற்று நூல்களில் மற்ற முறையிலான சுதந்திர போராட்டங்களுக்கு எவ்வித பங்களிப்பும் இல்லை என்று கூறப்படுவது உண்மையல்ல. அஹிம்சைப் போராட்டங்களுடனேயே பக்கவாட்டில் ஆயுதப் போராட்டங்களும் நடைபெறாவிட்டால் இந்தியாவிற்க சுதந்திரம் கிடைத்திருக்க இன்னும் பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும் என்று தெரிவித்தார்.
எல்லை நிலவரம்: ராணுவத் தளபதி தகவல்: சீனாவை ஒட்டிய எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாகவே இருக்கிறது. எனினும், நிலைமை கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
பொங்கல் விடுமுறை: சென்னை மெட்ரோ சேவையில் மாற்றம்: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 13 மற்றும் 14-ம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். மேலும், கடைசி ரயில் அனைத்து முனையங்களில் இருந்து இரவு 12 மணிக்கு புறப்படும். ஜனவரி 18-ம் தேதி முதல் ரயில் சேவை காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணிக்கு தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.