கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்

கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்
Updated on
1 min read

கேரள மாநிலத்தில் நடைபெற்ற சூரிய ஒளி மின் தகடுகள் (சோலார் பேனல்) மோசடி வழக்கில் சிக்கிய சரிதா நாயர் மீது, கோவை மாவட்ட குற்றப்பிரிவிலும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை கோவை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.6-ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு, சரிதா நாயர் நேற்று ஆஜரானார். விசாரணை, வரும் ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் சரிதா நாயர் கூறியது:

கேரள மாநிலம் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சோலார் பேனல் வழக்கில், எனக்கு 3 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் என் மீது 8 பிரிவுகளில் குற்றம் சுமத்தப் பட்டிருந்தது. இதில் 7 பிரிவுகளில் உரிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டேன். மோசடி பிரிவில் மட்டும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். இதையடுத்து, எனக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் புள்ளிகள் மீது நான் தெரிவித்த புகார்கள் தொடர்பான ஆதாரங்களை, சோலார் பேனல் ஆணையத்திடம் ஏற்கெனவே ஒப்படைத்துள்ளேன்.

திமுக-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மீதான புகார் தொடர் பான ஆவணங்களையும் சோலார் பேனல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளேன். குற்றப்பிரிவு போலீஸார் உரிய விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொணர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் மீது நான் கூறிய அனைத்து புகார்களுக்கும் ஆதாரம் உள்ளது. போலீஸார் நேர்மையான முறையில் விசாரணை நடத்தினால், அனைவருக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in