“சுபஸ்ரீ மரண வழக்கில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்” - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

ஈஷா யோகா மையம் | கோப்புப் படம்
ஈஷா யோகா மையம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஈஷா யோகா மையத்துக்குச் சென்று, பின்னர் மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது மரண வழக்கில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

திருப்பூரைச் சேர்ந்தவர் பழனிகுமார். பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி சுபஸ்ரீ (34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சுபஸ்ரீ கோவை ஈஷா யோகா மையத்துக்கு 7 நாள் பயிற்சிக்கு செல்வதாக கணவர் பழனிகுமாரிடம் கூறிவிட்டு, கடந்த மாதம் 11-ம் தேதி கோவைக்கு வந்தார். பயிற்சி முடித்து 18-ம் தேதி சுபஸ்ரீ வீட்டுக்கு செல்லவில்லை. மாயமாகிவிட்டார்.

இதுதொடர்பாக பழனிகுமார் கடந்த மாதம் 19-ம் தேதி ஆலாந்துறை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் மாயமானோர் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே, பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சுபஸ்ரீ சாலையில் நடந்து செல்வதும், அந்த வழியாக வந்த காரில் ஏறி சிறிது தூரம் சென்றதும் அதிலிருந்து இறங்கி ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, மாயமான சுபஸ்ரீ, செம்மேட்டை அடுத்த காந்தி காலனியில் உள்ள ஒரு விவசாய தோட்டக் கிணறில் சடலமாக கடந்த ஜன.1-ம் தேதி கண்டெடுக்கப்பட்டார். அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "சுபஶ்ரீ காணாமல் போனதை அறிந்து 19.12.2022 அன்று ஆலந்துரை காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் முறையாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கக்கூடிய கிணற்றில் சுபஶ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது (postmortem).

சுபஶ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணப்பு கேமாராக்கள் (CCTV) பதிவுகள், சுபஶ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in