

சென்னையின் கடலோரப் பகுதிகளில் 12-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடலில் மலர்களைத் தூவியும், பால் ஊற்றியும், மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தும் ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். காசிமேட்டில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமி பேரலையால் தமிழக கடலோரப் பகுதியில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சென்னையின் கடலோரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கோர நிகழ்வின் 12-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு, சுனாமியால் இறந்தவர்களின் படங்களுக்கு மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தினார். கடற்கரைக்குச் சென்று, கடல் நீரில் மலர்கள் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார். அவரோடு ஏராளமானோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக தண்டையார் பேட்டை சத்யநாராயணா சாலை அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து காசிமேடு நோக்கி வந்த மவுன ஊர்வலத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். சுனாமியில் இறந்தவர்களின் படங்கள் வழிநெடுகிலும் வைக் கப்பட்டிருந்தன. அவற்றுக்கும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலர் பாலகங்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ‘‘சுனாமி என்ற வார்த்தையே தெரியாத தமிழகத்தை 2004-ல் சுனாமி தாக்கியபோது, 8,000 பேர் உயிரிழந்தனர். மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அப்போது தமிழக அரசால் விரைவாக எடுக்கப்பட்ட மீட்பு, நிவாரண, மறுவாழ்வு நடவடிக்கையால், சுனாமி ஏற்பட்ட சுவடே இன்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வுக்காக பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் அரசாக இருக்கும்’’ என்றார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கம், சென்னை பைபர் போட் மீன்பிடி தொழிலாளர் நலச்சங்கம், சென்னை செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் மற்றும் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் காசிமேடு பகுதியில் அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
மெரினாவில் அஞ்சலி
மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மணல் நினைவுச் சிற்பத்தின் மீது மலர் தூவி மீனவ மக்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடலில் பால் ஊற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சுனாமி நினைவு தின பேரணி நடத்தப்பட்டது. காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சுனாமி நினைவுக்கொடி ஏற்றியும், அஞ்சலி பாடல் பாடியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சுனாமியில் இறந்தவர்களின் வீடுகளில் அவர்களது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னையில் சுனாமியால் அதிக பாதிப்பு ஏற்பட்ட பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைத்து கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
ஈசிஆரில் கண்ணீர் அஞ்சலி
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், கோவளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த மீனவர் சந்திரன் கூறும்போது, ‘‘சுனாமி பேரலை ஏற்பட்டு 12 ஆண்டுகள் ஆன நிலையில், அது ஏற்படுத்திய இழப்பை இன்னும் எங்களால் சரிசெய்ய முடியவில்லை. எங்கள் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் பல லட்சம் மதிப்புள்ள உடைமைகளை இழந்துள்ளனர்’’ என்றார்.