பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கொடுப்பனவு தொகை கிடைக்காமல் இலங்கை அகதிகள் பாதிப்பு

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கொடுப்பனவு தொகை கிடைக்காமல் இலங்கை அகதிகள் பாதிப்பு
Updated on
1 min read

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால், 'கொடுப்பனவு' தொகை கிடைக்காமல், அடிப்படை தேவைகளுக்கு பணமின்றி பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் இலங்கை அகதிகள்.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து அகதிகளாக வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள், கோவை மாவட்டத்தில், ஆழியாறு, கோட்டூர் பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழக அரசு சார்பில், மாதந்தோறும் அகதிக் கொடுப்பனவு தொகையாக குடும்ப தலைவருக்கு ரூ.1000, 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.750, 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.450 அத்துடன் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு முதியோர் உதவித்தொகையாக ரூ. 1000 மற்றும் ரேஷன் பொருட்கள், ஆண்டுக்கு ஒரு முறை கோ-ஆப் டெக்ஸ் கடைகளில் ரூ.500 மதிப்பில் துணி, வீடுகளுக்கு இலவச மின்சாரம் என பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கடந்த மாதம் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ‘கொடுப்பனவு’ தொகை இதுவரை கிடைக்கவில்லை என இம்முகாமில் உள்ள அகதிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கோட்டூர் அகதி முகாமைச் சேர்ந்த நடராஜ், ‘தி இந்து’விடம் கூறியதாவது: தமிழக அரசு இலங்கை அகதிகளுக்கு வழங்கும் கொடுப்பனவு தொகை ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள், முகாம் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில், முகாமில் மினி ஏடிஎம் இயந்திரம் மூலம் வங்கி அதிகாரிகளால் பட்டுவாடா செய்யப்படும். தற்போது இம்மாதத்திற்கான தொகை வழங்குவதற்கான நாளும் நெருங்கி விட்டது. ஆனால் முந்தைய மாதத்துக்கான தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

பண மதிப்பு நீக்கம் பிரச்சினையால் கால தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த மாதம் ரேஷன் கடையில் அரிசியும் வழங்கப்படவில்லை. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் பெயிண்டிங், கட்டிட வேலை, விவசாயத் தோட்டங்களில் கூலி வேலை, பாரம் தூக்கும் வேலைகளுக்குச் செல்லக்கூடிய அடித்தட்டு மக்கள் ஆவர். அந்த வேலையும் தினமும் கிடைக்கும் என்ற நிச்சயம் கிடையாது. தற்போது அரசின் கொடுப்பனவு தொகையும் கிடைக்காமல், ரேஷனில் அரிசியும் கிடைக்காமல் உணவுக்கே சிரமப்படும் சூழல் எழுந்துள்ளது என்றார்.

அகதிகள் முகாமிற்கான வருவாய் ஆய்வாளர் பொன்னுச்சாமி கூறியதாவது:

முகாம் அகதிகளுக்கான கொடுப்பனவு தொகை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் சரியாக வழங்கப்பட்டு வருகிறது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் காரணமாக கொடுப்பனவு தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முகாம் வட்டாட்சியர் மூலம் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விரைவில் கொடுப்பனவு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in