ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ரயில்களில் புதிய கட்டண சலுகை
நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ அதிவேக ரயில்களில் புதிய கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ என 3 வகையான பெயர்களில் 140-க்கும் மேற்பட்ட அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களின் கட்டணத்தை கடந்த செப்டம்பர் மாதம் சோதனை முயற்சியாக உயர்த்தியது. அதன்படி, முதல் 10 சதவீத இருக்கைகளுக்கு சாதாரண கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்படும். அடுத்தடுத்து 10 சதவீதம் உயர்ந்து கொண்டே செல்லும் வகையில் கட்டணம் இருக்கும். அதிகபட்சம் 50 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த கட்டண உயர்வால், ரயில்களில் கூட்டம் கணிசமாக குறைந்தது. இதற்கிடையே, ரயில்வேத்துறை தற்போது திடீரென புதிய கட்டண சலுகையை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ அதிவேக ரயில்களில் காலியாகவுள்ள இடங்களில் சலுகை கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய சலுகை அறிமுகம் செய்யப்படுகிறது.
அதாவது, பயணிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகும், காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்வோர் 50 சதவீதத்துக்கு பதிலாக 40 சதவீத உயர்த்தப்பட்ட கட்டணத்தில் டிக்கெட் பெறலாம்.
டிசம்பர் 15-ம் (நாளை) முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் இந்த சலுகை பொருந்தும். மேற்கண்ட அதிவேக ரயில்கள் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரையில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ரயில் நிலையங்களில் இருக்கும் நடப்பு (கரன்ட்) கவுண்டர்களில் முன்பதிவு செய்யலாம்' என்று கூறப்பட்டுள்ளது.
