Published : 12 Jan 2023 06:23 AM
Last Updated : 12 Jan 2023 06:23 AM

தமிழகத்தில் தோன்றிய சனாதனம்தான் பாரத நாடு முழுவதும் பரவியது: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

திருவையாறில் நேற்று ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176-வது ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்கு முன் அதிஷ்டானத்தை தரிசித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், சபா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர்.

தஞ்சாவூர்: தமிழகத்தில் தோன்றிய சனாதனம்தான் நாடு முழுவதும் பரவியது என திருவையாறு தியாகராஜர் ஆராதனை நிறைவு விழாவில் தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176-வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. விழாவை தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் பாடியும், இசைத்தும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

விழாவின் நிறைவு நாளான நேற்று பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து காலை 6 மணிக்கு உஞ்சவிருத்தி நிகழ்ச்சியான சுவாமி வீதியுலா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவில் நேற்று
பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடியும், இசைத்தும் தியாகராஜருக்கு
இசையஞ்சலி செலுத்திய இசைக் கலைஞர்கள். படங்கள்: ஆர்.வெங்கேடஷ்

ஸ்ரீ ராமரின் தீவிர பக்தர்

பின்னர், பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஸ்ரீ ராமரின் மிகப் பெரிய பக்தர்களுள் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் வாழ்ந்த இப்பகுதிக்கு நாம் வந்திருப்பதால், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். தியாகராஜர், ஸ்ரீ ராமனைப் போற்றி ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றியுள்ளார்.

நமது பாரத நாடு ரிஷிகளாலும், தியாகராஜ சுவாமிகள் போன்றகவிகளாலும்தான் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தோன்றிய சனாதனம்தான் நாடு முழுவதும் பரவியது. அனைத்து மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கியே நாட்டின் வளர்ச்சி இருக்கிறது.

பக்தி தான் மிகப் பெரும் சக்திவாய்ந்த ஊடகமாக திகழ்கிறது. இந்த பக்தி மூலம் தியாகராஜ சுவாமிகள் ஏராளமான கீர்த்தனைகளை பாடி கர்நாடக இசையை உலகுக்கு தெரியப்படுத்த முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்.

சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜ சுவாமிகள்.

புண்ணிய பூமி

ஸ்ரீ ராமனை நேசிக்கும் அனைவருக்குமான ஓர் இடமான திருவையாறை புண்ணிய பூமியாக நாம் உணர்கிறோம் என்றார். பின்னர், பிரபஞ்சம் எஸ்.பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, கடலூர் ஜனனி, ஓ.எஸ்.அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், சின்மயா சகோதரிகள், விஷாகா ஹரி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீ தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு பல்வேறு வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில், ஸ்ரீதியாகபிரம்ம மகோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x