

கோவை: கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்த, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார்.
முதலில் உக்கடம் போலீஸார் விசாரித்த நிலையில் பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபீக், உமா் பாரூக், பெரோஸ்கான், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை பெறவும், தொழில்நுட்ப ரீதியிலான ஆதாரங்களை திரட்டவும் முகமது தல்கா, ஷேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தவுபீக், சனோபர் அலி ஆகியோரை சில தினங்களுக்கு முன்னர் தங்களது காவலில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் எடுத்து விசாரித்தனர்.
நேற்று முன்தினம் (ஜன. 10-ம்தேதி) நள்ளிரவு சனோபர் அலி, முகமது ரியாஸ், முகமது நவாஸ், தவுபீக் ஆகிய 4 பேரை மட்டும் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமேஷா முபின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து என்.ஐ.ஏ. எஸ்.பி ஜித் தலைமையிலான அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
உக்கடத்தில் விசாரணை: தொடர்ந்து 4 பேரையும் உக்கடத்தில் உள்ள சனோபர் அலியின் வீடு, உக்கடத்தில் உள்ள சில பொது இடங்கள் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்த விசாரணைக் காட்சிகள் அனைத்தையும் போலீஸார் வீடியோவாக பதிவு செய்தனர்.