

மதுரை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த பாஜகவினர் வீடு வீடாகச்சென்று திமுக அரசின் தோல்வியைமக்களிடம் விளக்க வேண்டும் என அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
பாஜக மாநில நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்களுடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை பாண்டிகோவில் அருகே தனியார் மண்டபத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக துணைத் தலைவர் துரைசாமி, மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் அண்ணாமலை பேசியதாக கட்சியினர் கூறியதாவது: தமிழகம் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பின்னோக்கி சென்றுவிட்டது. ஊழல் மலிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும். அதற்காக மக்களிடம் சென்று திமுக ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்றதை புள்ளி விவரங்களுடன் விளக்க வேண்டும். திமுக தேர்தலில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் கையில் எடுக்கும்.
அதை சரியாக எதிர்கொண்டு தடுத்தால் திமுகவின் வெற்றியை தடுக்க முடியும். பாஜகவுக்கு எதிரானவர்களையும் நாம் சந்தித்து பேச வேண்டும். கட்சிக்கு புதிதாக வருவோரை அரவணைத்து செல்லவேண்டும். பாஜக நிர்வாகிகள் விசாலமான பார்வை கொண்டவர்களாக இருக்க வேண்டும். பயத்துடன் இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசி உள்ளார்.