

தாய் வழி மூதாதையர்கள் வாழ்ந்த தேவிபட்டினத்தில் ‘அன்னை சந்தியா நினைவு சத்துணவுக் கூடத்தை’ மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த செலவில் அமைத்துக்கொடுத்தார். அந்த மையம் இன்று குழந்தைகள் மையமாக செயல்பட்டு வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மிகவும் சிறிய வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அதனால், தனது தாயார் வேதவள்ளி என்ற சந்தியா மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார். சந்தியாவின் தாய் வழி மூதாதையர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சக்கரவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இங்கு ஆதிகேசவ பெருமாள் சமேத பெருந்தேவி தாயார் கோயில் அமைந் துள்ளது. இந்த கோயில் ஜெயலலிதாவின் தாய் வழி முன்னோர்களின் குலதெய்வமாக இருந்துள்ளது. இக் கிராமத்தில் வசித்து வந்த ஜெயலலிதாவின் தாய் வழி மூதாதையர்கள், பின்னர் தேவிபட்டினத்துக்கும், அதனையடுத்து ஸ்ரீரங்கம், கர்நாடக மாநிலம் மைசூரு மாண்டியா அருகே மேலக்கோட்டைக்கும் குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
எம்ஜிஆர் ஆட்சியில் சத்துணவுத்திட்ட உயர்நிலைக்குழு உறுப்பினராக இருந்த ஜெயலலிதா, தாய் வழி மூதாதையர்கள் வாழ்ந்ததன் நினைவாக தேவிபட்டினத்தில் நவபாஷான கோயில் செல்லும் வழியில், ‘அன்னை சந்தியா நினைவு சத்துணவுக் கூடத்தை’ தனது சொந்த பணம் ரூ. 1.65 லட்சம் செலவில் கட்டிக் கொடுத்தார். அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜெயலலிதா, சத்துணவுக் கட்டிடத்தை கடந்த 8.4.1984-ல் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அப்போதைய சத்துணவு திட்டத்துறை அமைச்சர் திருச்சி ஆர். சவுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியர் குருமூர்த்தி, ராமநாதபுரம் எம்எல்ஏவாக இருந்த டி.ராமசாமி, மாவட்ட பொதுவிநியோகக் கண்காணிப்புக்குழு உறுப்பினராக இருந்த என்.அன்புபகுருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சத்துணவுக்கூடத்தை திறந்து வைத்து, ஜெயலலிதா குழந்தைகளுக்கு பால் மற்றும் உணவு வழங்கினார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அன்வர்ராஜா எம்.பி. ஏற்பாட்டில் சக்கரவாளநல்லூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மூத்த வைணவர் எல்ஐசி நாராயணன் கூறு ம்போது, “ஜெயலலிதாவின் தாய் வழி மூதாதையர்கள் சக்கரவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய முன்னாள் அட் டர்னி ஜெனரல் பராசரன், ஜெயலலிதாவின் தாய் வழி உறவினரே. இக்கி ராமம் முழுவதும் வைணவ குலத் தினரே வாழ்ந் துள்ளனர். மழைநீரை மட்டுமே குடிக்கும் ‘சக்கரவாகம்’ என்ற பறவை இக்கிராமத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக சக்கரவாளநல்லூர் என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தனது தாயாரின் நினைவாகவே தேவிபட்டினத்தில் சத்துணவுக்கூடத்தை ஜெயலலிதா அமைத்துக் கொடுத்தார் என்றார்.
தேவிபட்டினத்தை சேர்ந்த எம்ஜிஆர் விசுவாசி என்.அன்புபகுருதீன் கூறும்போது, “அன்னை சந்தியா நினைவு சத்துணவுக்கூடம் திறக்கும்போது, பொதுவிநியோகத் திட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினராக இருந்தேன். இன்றும் அந்த சத்துணவுக்கூடம், அன்னை சந்தியா நினைவு குழந்தைகள் மையமாக செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அதை புனரமைப்பு செய்து பராமரித்து வருகிறது. திறப்பு விழாவுக்கு வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அதன்பின் 8.8.1999-ல் ராமநாதபுரம் தொகுதி எம்பி வேட்பாளரான கே.மலைச்சாமியை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்துக்கு தேவிபட்டினத்துக்கு வந்தி ருந்தார் என்றார்.