Published : 12 Jan 2023 04:05 AM
Last Updated : 12 Jan 2023 04:05 AM

பெண் உயிரிழந்த விவகாரத்தை சுயலாபத்துக்காக அரசியலாக்க முயற்சி: ஈஷா யோகா மையம் குற்றச்சாட்டு

பிரதிநிதித்துவப் படம்

கோவை: பெண் உயிரிழந்த விவகாரத்தை சுயலாபத்துக்காக அரசியலாக்க முயற்சி செய்கின்றனர் என ஈஷா யோகா மையம் குற்றம்சாட்டியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சுபஸ்ரீ (34), கோவை ஈஷா யோகா மையத்தில் 7 நாள் யோகா பயிற்சியை முடித்து வெளியேறிய நிலையில், செம்மேடு பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் கடந்த 1-ம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கணவர் பழனிகுமார் புகாரின் பேரில், ஆலாந்துறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என சில அரசியல் கட்சிகள், இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இது தொடர்பாக ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுபஸ்ரீயின் உயிரிழப்பு துரதிருஷ்டவசமானது. இச்சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்தும் வெளியிடக்கூடாது என இத்தனை நாட்கள் அமைதி காத்தோம். சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் போலீஸாருக்கு வழங்கி உள்ளோம்.

ஊடக முகமூடிகளை அணிந்து கொண்ட சில யூ-டியூபர்கள், சில ஊடக எழுத்தாளர்கள், சில உதிரி அமைப்பினர் இதனை தங்கள் சுய லாபத்துக்காக அரசியலாக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இவ்வழக்கு குறித்த வதந்திகள் மற்றும் அவதூறுகளை சில இயக்கங்களும், ஊடகங்களும் உள்நோக்கத்தோடு செய்திகளாக வெளியிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வன்மமான அவதூறுகள் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை பரப்பும் நபர்கள், இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வான உலகத்தை உருவாக்கும் எங்கள் நோக்கத்தையும், உறுதியையும் எவராலும் கலைத்து விடமுடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x