

சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயலில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்தது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அப்போது, ம.சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), பாலாஜி (விசிக), டி.ராமச்சந்திரன் (இந்தியகம்யூனிஸ்ட்), எம்.எச்.ஜவாஹிருல்லா (மநேம), சதன் திருமலைக்குமார் (மதிமுக), தி.வேல்முருகன் (தவாகா), ஜி.கே.மணி (பாமக), கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), சி.விஜயபாஸ்கர் (அதிமுக)ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூகநீதி. அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல்,சமூக உரிமைகளும், வாய்ப்புகளும் அமைய வேண்டும் என்ற எண்ணம்தான் சமூகநீதி.
அம்பேத்கர் பிறந்த இந்த மண்ணில், சாதியப் பாகுபாடு சார்ந்ததீண்டாமை இன்னும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை, வேங்கைவயல் கிராமத்து நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு உண்மையிலேயே வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியது; கண்டிக்கத்தக்கது.
வேங்கைவயல் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டேன். அதன்படி, டிச.27-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்தனர். அவர்கள் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
வேங்கைவயலைச் சேர்ந்த 2 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், அந்த கிராமத்திலிருந்து இதுபோன்ற நோய்த் தொற்றுடைய நோயாளிகள் வருகை அதிகரித்த நிலையில், குடிநீரைப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்தபோது, மனிதக் கழிவுகள் கலந்துள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து, மருத்துவர்கள் குழு வேங்கைவயலுக்குச் சென்று, டிச.26 முதல் இன்றுவரை அங்கேயே முகாமிட்டு, நோய்த்தடுப்பு, மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், உள்ளாட்சி அமைப்பின் உதவியோடு, அந்த கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறு மின்விசைத் தொட்டி ஆகியவை சுத்தம் செய்யப்பட்டது. குடிநீர் வழங்கு குழாய்களும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டதில், தற்போது குடிநீர் சுத்தமாக உள்ளது என அறிக்கை வரப்பெற்றுள்ளது.
இந்நிலையில், அங்குள்ள 32 வீடுகளுக்கும் ரூ.2 லட்சம் செலவில் முற்றிலும் புதிய இணைப்புக் குழாய்கள், குடிநீர் குழாய்கள் மூலம் கடந்த ஜன.5 முதல் சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ரூ.7 லட்சம் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டேங்கர் லாரி மூலமும் காலை, மாலை இருவேளையும் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 70 பேரிடம்விசாரிக்கப்பட்டுள்ளது. சம்பவத் தில் ஈடுபட்ட உண்மைக் குற்ற வாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்திலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் சமூக வளர்ச்சியில், ஒற்றுமையில் அவ்வப்போது தடைக்கற்களாக அமைந்து விடுகின்றன.
சமூகத்தில் உள்ள இன்னும் சில பகுதிகளில் காணப்படும் சாதி, மத வேறுபாடுகளே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்து, நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும்.
ஆனால், சாதி, மதங்களைத் தூக்கிப் பிடித்து, பிரிவினையை ஏற்படுத்தி வரும் சில சமூக விரோதிகள் இன்னும் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள் என்பதையும் நாம் நினைவிலே கொள்ளவேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை இரும்புக்கரம் கொண்டு எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.