

சென்னை: பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் விவசாயிகள், தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழகவேளாண்மைத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக வேளாண்மைத் துறை வெளியிட்டசெய்திக்குறிப்பு: தமிழகத்தில் “பிரதம மந்திரிகிஸான் சம்மான் நிதி’’ திட்டத்தின்கீழ், சொந்தமாக விவசாய நிலம்வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு, 4 மாதங்களுக்கு ஒருமுறைதலா ரூ.2 ஆயிரம் வீதம், 3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் 13-வதுதவணை பெற கட்டாயம் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல்நடப்பாண்டு மார்ச் வரையிலான காலத்துக்கு 13-வது தவணைத் தொகையை ஜனவரி மாத இறுதியில் விடுவிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, பி.எம். கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த (e-KYC), வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே இந்த தவணைத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பயன்பெற்ற பயனாளிகளில் 8 லட்சத்து 84 ஆயிரத்து 120 பேர், தங்களின் ஆதார் எண்ணை இன்னும் உறுதி செய்யாமல் இருந்தனர்.
எனவே, ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகளும் தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அஞ்சல் துறை மற்றும் பொது சேவை மையத்துடன் இணைந்து, கிராமம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது, ஆதாரை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதன் காரணமாக, இதுவரை 5 லட்சத்து 27 ஆயிரத்து 934 பயனாளிகளின் ஆதார் எண் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 லட்சத்து 56 ஆயிரத்து 186 பயனாளிகளுக்கும் ஆதார் எண்ணை உறுதிசெய்யும் பணி வேளாண்மை-உழவர் நலத் துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து பயனாளிகளும், சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குச்சென்று, ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக சந்தேகம் இருந்தால், வட்டாரவேளாண் உதவி இயக்குநரைஅணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.