Published : 11 Jan 2023 09:28 PM
Last Updated : 11 Jan 2023 09:28 PM

எனக்கு விஜய், அஜித் இருவரையுமே பிடிக்கும்: காரணம் பகிர்ந்த அண்ணாமலை

திண்டுக்கல்லில் நடந்த உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை

திண்டுக்கல்: "எனக்கு விஜய்யும் பிடிக்கும், அஜித்தும் பிடிக்கும். எனவே ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ளவேண்டாம். இரு நடிகர்களும் ஜென்டில்மேனாக இருக்கிறார்கள். அதேபோல் ரசிகர்களும் ஜென்டில்மேனாக இருக்கவேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் நடந்த பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆதரவாக மத்திய அரசு அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடும், தமிழகமும் ஒன்று தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும், குழப்பமும் இல்லை. இதுவரை வந்த எந்த ஆளுனரும் தமிழை கற்கவேண்டும் என முயற்சி எடுக்கவில்லை. இந்த ஆளுநர் தமிழை கற்று சட்டமன்றத்தில் பேசியுள்ளார். ஆளுநர் உரையில் திமுக அரசை பாராட்டித்தான் பேசியுள்ளார். இந்த உரையில் சில இடங்களில் எனக்குஒப்புதல் இல்லை.

திமுக கொடுத்ததை படிக்கவில்லை என அவர்களுக்கு பிரச்சினை. அதை படித்தார் என்பது எங்கள் பிரச்சினை. அந்நிய முதலீட்டை கொண்டுவந்ததில் தமிழகம் முதலிடம் என்பது தவறு. இந்த பொய்யான தகவலை ஆளுநர் எப்படி படிப்பார். ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் போல மத்திய அரசும், மாநில அரசும் செயல்படவேண்டும். ஒன்று வேகமாகவும், ஒன்று மிதவேகமாகவும் சென்றால் சரியாக இருக்காது.

குடிமைப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு முழு விசுவாசமாக இருக்கவேண்டும். கர்நாடகாவில் நானே, ஆட்சிக்கு வந்த காங்கிரசின் சித்தராமையா, பா.ஜ., எடியூரப்பா, ஜனதா தளம் கட்சியினருக்கு ஆகியோருக்கு விசுவாசமாக பணிபுரிந்துள்ளேன். இப்படித்தான் ஒரு அதிகாரி இருக்கவேண்டும்.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதியே ஒன்றிய அரசு என்று சொல்லவில்லை. எனவே என்னைக் கேட்டால் திமுக அரசு பயன்படுத்தும் ஒன்றிய அரசு என்ற வார்த்தை தவறு என்று தான் சொல்வேன். திமுக 74 ஆண்டுகளாக அரசியலில் உள்ள கட்சி, ஆளுநரை அநாகரிகமாக விமர்சித்து எழுதுவது தேவையற்றது. 2021-ல் ஆளுநருக்கு வந்த அனைத்து பில்களுக்கும் கையெழுத்த போட்டுள்ளார். தற்போதுள்ள 15 பில்லில் 12 பில் வேந்தராக முதல்வரை நியமிக்கவேண்டும் என்பது. மற்றொன்று கூட்டுறவு பதவிக்கானது, ஆன்லைன் ரம்மி ஆகியவை தான். இவற்றிற்கு காரணம் உள்ளது. கூட்டுறவு பதவிகளை காலி செய்துவிட்டு திமுகவினரை உட்காரவைக்கும் முயற்சி இது.

ஆன்லைன் ரம்மி விஷயத்தில் மத்திய அரசின் அதிகாரத்தை மாநில அரசு பயன்படுத்துகிறது என ஆளுநர் சொல்லியுள்ளார். செவலியர்களுக்கு 11 மாதம் வேலைசெய், ஒரு நாள் விடுத்து மீண்டும் பணி செய்யலாம் என்கிறார்கள். இதுவும் தற்காலிக பணிக்கான அரசாணை தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதை செய்வோம், அதை செய்வோம் என சொன்ன முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நடக்கமுடியாது என்று தெரிந்தும் பொய்வாக்குறுதியை சொல்லியுள்ளார்கள். ஆளுநரிடம் வேலைவாங்கவேண்டிய திறமை முதல்வருக்கும் அவரது அமைச்சரவைக்கும் உள்ளது. முதல்வரிடம் வேலைவாங்கவேண்டிய திறமை ஆளுநருக்கும் உள்ளது. இது இரட்டை ஜோடி காளை மாதிரி.

நீட் ரத்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை கடைசிவரை நிறைவேற்றவே முடியாது. இதை நிதியமைச்சரும் சொல்லிவிட்டார். பழநி கோயில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்தவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். திண்டுக்கல் மாநகராட்சியில் பேருந்து நிலையத்தில் 34 கடைகள் ஏலம் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது. அமைச்சரின் தூண்டுதலின் பேரில் இது நடந்துள்ளது. செய்தியாளர்களிடம் வெள்ளை அறிக்கையை மேயர் தரவேண்டும். மாநகராட்சிக்கு இதன் மூலம் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை செய்யவில்லை என்றால் பா.ஜ., போராட்டம் நடத்தும்.

மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக மாநில அரசு நிறைவேற்றுவதில்லை. தமிழகம் சட்டம் ஒழுங்கு அதாளபாதாளத்தில் உள்ளது. பிரதமர் தமிழகத்தில் போட்டியிடவேண்டும் என அனைவருக்கும் ஆர்வம்தான். அதிகாரப்பூர்வமாக நான் சொல்வதற்கு எந்த தகவலும் இல்லை” என்றார்.

நடிகர்கள் அஜித், விஜய்யை பாராட்டிய அண்ணாமலை: “எனக்கு விஜய்யும், பிடிக்கும், அஜித்தும் பிடிக்கும். அஜித்தின் உழைப்பு அசாத்தியமானது. தனிமனிதன் சினிமா துறையில் எந்தவித பின்புலமும் இல்லாமல் சாதனைசெய்துள்ளது சாதாரண விஷயம் இல்லை. விஜய் முதல் படம் பார்த்துள்ளேன். இப்பொழுது நடிப்பில் மிரட்டி வருகிறார். அசாத்திமான டான்சர். இரண்டு படமும் நான் பார்ப்பேன். நேரம் கிடைக்கும் போது இரண்டு படத்தையும் பார்ப்பேன். அரசியல் களத்தில் வாரிசை எதிர்ப்பேன். அரசியலில் துணிவாக இருக்கிறேன். ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம். இரு நடிகர்களும் ஜென்டில்மேனாக இருக்கிறார்கள். ரசிகர்களும் ஜென்டில்மேனாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x