

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, சுமாராகப் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுவாக, பொதுத்தேர்வு களில் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், சுமா ராகப் படிக்கும் மாணவர்களை தனித் தேர்வர்களாக எழுத வைக்கும் சம்பவங்களும், அவர்களை மாற்றுச் சான்றிதழை (டிசி) வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்குச் செல்லு மாறு வற்புறுத்தும் நிகழ்வுகளும் தனியார் பள்ளிகளில் நடப்பது உண்டு. இதே நிகழ்வுகள் வழக்கம் போல் இந்த ஆண்டும் பல்வேறு தனியார் பள்ளிகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக் கான பெயர் பட்டியல் தயாரிப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறை கள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
2016-17-ம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் (Nominal Roll) தயார் செய்யும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. ஒரு சில மாவட் டங்களில் சில பள்ளிகள் கல்வித் தரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகளின் பள்ளி மாற்றுச் சான்றிதழை பெற்று வேறு பள்ளிக் குச் செல்ல வற்புறுத்துவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. வருகைப் பதிவேட்டில் உள்ள அனைத்து எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களின் பெயர், பெயர் பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டும். எவர் பெயரேனும் விடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.