Published : 27 Dec 2022 06:59 AM
Last Updated : 27 Dec 2022 06:59 AM

இருக்கை விவகாரம்: பேரவைத் தலைவருடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக பேரவை தலைவர் அப்பாவுவை, அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து வலியுறுத்தினர்.

அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்படும் நிலையில், பழனிசாமி தரப்பினர் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, ஆர்.பி.உதயகுமாரை அப்பதவிக்கு நியமித்து பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர். இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பும் கடிதம் அளித்தது. ஆனால், இதுகுறித்து பேரவைத் தலைவர் தனது முடிவை குறிப்புரையாக அளித்தார். இதை ஏற்காத பழனிசாமி தரப்பு கூட்டத் தொடரை புறக்கணித்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தொடங்கிய சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில், இருக்கைகள் மாற்றப்படவில்லை. இதனால், பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்திருந்தனர். இதனிடையே, அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின்படி நேற்று காலை சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சந்தித்தனர். அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்துள்ளதை சுட்டிக்காட்டி மீண்டும் வலியுறுத்தினர். அப்போது, ‘நல்லதே நடக்கும்’ என பேரவைத் தலைவர் தெரிவித்ததாக அதிமுக எம்எல்ஏக்கள் கூறினர்.

ஓபிஎஸ் சந்திப்பு: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பேரவைத் தலைவரை நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:

பேரவைத் தலைவரை சந்தித்து, இரங்கல் தீர்மானத்தின் மீது பேசுவது குறித்து கேட்டேன். எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக பேரவைத் தலைவர் முடிவெடுப்பார்.

புலம்பெயர்ந்தோருக்கான வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் விடுத்த அழைப்பை ஏற்று அதிமுக சார்பில் யார் பங்கேற்பது என முறைப்படி அறிவிப்போம். இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x