உறைபனியால் உறைந்த உதகை: வெண்கம்பளம் விரித்ததுபோல் காட்சியளிப்பு

பனி பொழிவால் வெண்மையாக காட்சியளித்த உதகை குதிரை பந்தய மைதானம். படம்: ஆர்.டி.சிவசங்கர்
பனி பொழிவால் வெண்மையாக காட்சியளித்த உதகை குதிரை பந்தய மைதானம். படம்: ஆர்.டி.சிவசங்கர்
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக உறைபனி தாமதமாகத் தொடங்கினாலும், அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும். இந்தாண்டு அதிக அளவு மழை நாட்களைக் கொண்டிருந்ததால் உறைபனி தள்ளிப்போனது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. உறைபனி தொடங்கிய முதல் நாளே வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவானது. தலைகுந்தா, அவலாஞ்சி, முக்கூர்த்தி, கேத்தி பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்தையும் எட்டியது.

நேற்று அதிகாலை உதகை தாவரவியல் பூங்கா மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரியாக பதிவானது. புல்வெளிகள் அனைத்தும் உறைபனியால் வெள்ளிக்கம்பளம் விரித்தாற்போல் காட்சியளித்தன.

இதுதொடர்பாக மக்கள் கூறியதாவது: வழக்கத்தைவிட இந்த ஆண்டு உறைபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இரவிலும் அதிகாலையிலும் கடுமையான குளிர் வாட்டுகிறது. தேயிலை உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகின்றன. தாவரங்கள் மற்றும் புல்வெளிகளும் தொடர்ந்து கருகி வருவதால் வனங்களில் பசுமை குறைந்து வனவிலங்குகள் இடம் பெயரவும் வாய்ப்புள்ளது என்றனர்.

இந்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு நிறுவன விஞ்ஞானிகள் கூறும்போது, ‘‘கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் அதன் சுற்றுவட்டாரங்களில் உறைபனியின் தாக்கம் அதிகம் இருக்கும். உதகை, குன்னூர், கோத்தகிரியில் கடுமையான உறைபனி நிலவும் வாய்ப்புகள் உள்ளன. மேகமூட்டம் இன்றி தொடர்ந்து காணப்பட்டால் வெப்பநிலை மைனஸில் செல்ல வாய்ப்புள்ளது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in