

சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாள் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோயிலில் சுவாமி சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் தீனதயாள் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் தான் அப்ரூவராக மாறுவதாக நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாதித்த நீதிபதி வசந்தி, டிசம்பர் 7-ம் தேதி அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் தீனதயாள் ஆஜராக உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, தீனதயாள் மற்றும் அவரது மனைவி அபர்ணா ஆகியோர் அருப்புக்கோட்டையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்கள். நீதித்துறை நடுவர் அறைக்குள், நீதித்துறை நடுவர் சொர்ணகுமார் முன்னிலையில் அவர்கள் இருவரும் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.