

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து அலங்காநல்லூர் போட்டியில் பங்கேற்க காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.15-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு மற்றும் 17-ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த காளைகள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதால் இந்த போட்டி பிரசித்தி பெற்றதாக கொண்டாடப்படுகிறது.
அனைத்து காளைகளுக்கும் தங்கம்
இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக் காசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் கார்கள் வழங்கப்பட உள்ளன. பல கோடி ரூபாய்க்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அனைவரிடமும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதல் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான காளைகள் முன்பதிவு தொடங்கியது.
இதற்காக மதுரை மாவட்ட நிர்வாகம், madurai.nic.in இணையதளத்தை திறந்துள்ளது. இந்த இணையதளத்தில் காளை உரிமையாளர்கள் தங்கள் பெயர், காளைகளை பதிவு செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் நடக்கும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில், ஒரு காளை ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.
உள்ளூர் மக்கள் ஏமாற்றம்
ஆனால், தமிழகம் முழுவதும் உள்ளகாளை உரிமையாளர்கள் அலங்காநல்லூர் போட்டியில் பங்கேற்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அதிகபட்சம் 850 காளைகளை மட்டுமே வாடிவாசலில் அவிழ்க்க முடியும். அதனால், காளை வளர்க்கும் முக்கிய பிரமுகர்கள் டோக்கன் பெற கடும் முயற்சி செய்து வருகிறார்கள்.
ஆண்டுதோறும் விஐபிகளுக்கு மட்டும் தடையின்றி டோக்கன்கள் வழங்கப்பட்டு விடுகிறது. அதனால் உள்ளூர் மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். இந்தஆண்டு உள்ளூர் காளைகளுக்கு முன்னுரிமை தரவேண்டுமென அலங்காநல்லூர் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து காளை உரிமையாளர் முனியசாமி கூறுகையில், ‘‘அலங்காநல்லூரில் குலதெய்வத்தை முன்னிறுத்தி விவசாயத்தையும், கால்நடைகளை போற்றவும், இளைஞர்களின் வீரத்தை வெளிக்காட்டவும் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடக்கிறது. இங்கு நடக்கும் போட்டியைக் காணத்தான் முதன்முதலாக வெளிநாட்டினர் வந்தனர். இதனால் இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு சர்வதேச கவனம் பெற்றதால், இதில் பங்கேற்கவே காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்" என்றார்.