

கோவை: பாம்பன் ரயில்வே பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், கோவை-ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர ரயில் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பாம்பன் ரயில்வே பாலத்தில் தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கோவையில் இருந்து செவ்வாய்க் கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு ராமேஸ்வரம் புறப்பட்டுச் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16618), ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் கோவையில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே இந்த ரயில் இயக்கப்படாது. ராமேஸ்வரத்தில் இருந்து புதன் கிழமைகளில் இரவு 7.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16617), ராமேஸ்வரம்-ராமநாதபுரம் இடையே மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் ராமேஸ்வரத்துக்கு பதில், ராமநாதபுரத்தில் இருந்து கோவை புறப்பட்டு வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.