Published : 11 Jan 2023 04:03 AM
Last Updated : 11 Jan 2023 04:03 AM

கோவை | விபத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை: விபத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வாகன ஓட்டுநர், காப்பீட்டு நிறுவனத்துக்கு கோவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் புள்ளநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலகிருஷ்ணன் (29). இவர், மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் கடந்த 2019 மார்ச் 13-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கோவை பூலுவப் பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டி வந்த மினி டெம்போ மோதியது.

விபத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுரேஷ் பிறப்பித்த உத்தரவு: சாலையை குறுக்காக கடக்க மனுதாரர் முயன்றுள்ள நிலையில், வாகனங்கள் வருகிறதா என்பதை கவனித்தே குறுக்கே கடந்திருக்க வேண்டும். விபத்து நடந்த விதத்தை பார்க்கும்போது மினி டெம்போ ஓட்டுநரின் கவனமின்மை 80 சதவீதமும், மனுதாரரின் தற்கவனமின்மை 20 சதவீதமும் காரணம் என நிர்ணயம் செய்கிறேன்.

விபத்து காரணமாக மனுதாரரின் வலது கட்டைவிரல் பாதி அகற்றப்பட்டுள்ளது. வலது காலிலும், மூக்கிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு 79 சதவீத உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவக் குழுமம் சான்றளித்துள்ளது. மனுதாரர், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கறி மார்க்கெட்டில் பாரம் தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்து மாதம் ரூ.15 ஆயிரம் வருவாய் ஈட்டி வந்ததாக தெரிவித்துள்ளார்.

விபத்து காரணமாக இந்த வேலையை அவரால் தொடர்ந்து செய்ய இயலாது. எனவே, வலி, வேதனை, நிரந்தர வருவாய் இழப்பு, மருத்துவச் செலவு ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ.31.34 லட்சம் கிடைக்கத்தக்கது. இருப்பினும், மனுதாரரின் தற்கவனமின்மை 20 சதவீதத்தை கழித்து ரூ.25.07 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் வாகன ஓட்டுநர், உரிமையாளர், காப்பீட்டு நிறுவனம் இணைந்து அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x