

சென்னை: நிர்பயா திட்டத்தின் கீழ் 2,330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரூ.4.72 கோடியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகளிர், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிர்பயா திட்டத்தின் கீழ், சென்னை மாநகரப் பேருந்துகளில் ரூ.72.25 கோடி மதிப்பில், 2,500 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என 66 இடங்களில், கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. தற்போது அதில் 2,330 பேருந்துகள், பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என 63 இடங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 2,330 பேருந்துகளில், ஒவ்வொரு பேருந்துக்கும் ஒரு மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர், 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசரகால பொத்தான்கள் மற்றும் ஒரு ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் ஏற்பட்டால்.. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள பேருந்துகளில், பயணிக்கும்மகளிர், குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பட்சத்தில், பேருந்தில்பொருத்தப்பட்டுள்ள அவசரகால பொத்தானை அழுத்தும்போது ஒலிபெருக்கியில் ஒலி எழுப்பப்படும். இது ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
மேலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்கும் தானாகவே ஒரு நிமிட காணொலிக் காட்சி உடனடியாக செல்லும். இப்பதிவு ஆய்வு செய்யப்பட்டு, அசம்பாவிதம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சென்னை பெருநகரக் காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
ஒரு நிமிட காணொலி: இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், பி.கே.கேர்பாபு, போக்குவரத்துத் துறை செயலர் கே.கோபால், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.