Published : 11 Jan 2023 06:10 AM
Last Updated : 11 Jan 2023 06:10 AM

பல்வேறு பகுதிகளில் போராட்டம்: ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டின்பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் எதிரொலியாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கூடுதல்போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று முன்தினம்தொடங்கியது. ஆண்டின் முதல்கூட்டம் என்பதால் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அவரது உரையில் சிலபகுதிகளை பேசாமல் தவிர்த்ததை சுட்டிக் காட்டி தீர்மானம் நிறைவேற்றியதால் அவையில் இருந்து ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார். ஆளுநரின் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளுநருக்கு ஆதரவான குரல்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆளுநரை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் திரண்டு ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்வரும் 13-ம் தேதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வரும்20-ம் தேதியும் ஆளுநர் மாளிகைமுற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கட்சிகள் சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் மகேந்திரன் தலைமையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. கிண்டி உதவிஆணையர் மற்றும் காவல்ஆய்வாளர் நேரடி மேற்பார்வையில் 25 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, சென்னை பாதுகாப்புப் பிரிவு போலீஸாரும், ஆயுதப்படை போலீஸாரும் ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x