Published : 11 Jan 2023 06:17 AM
Last Updated : 11 Jan 2023 06:17 AM

மீண்டும் தற்காலிக ஒப்பந்த பணி தேவையில்லை: நாளை கோட்டை நோக்கி பேரணி செல்ல செவிலியர் முடிவு

சென்னை: கரோனா தொற்று காலத்தில் அரசுமருத்துவமனைகளில் 6,282 செவிலியர்கள் தற்காலிக முறையில் ஒப்பந்த செவிலியர்களாக நியமிக்கப்பட்டனர். அதில், 3000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது.

இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி 810 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீதமிருந்த 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிச. 31-ல் ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீட்டிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து,கடந்த 1-ம் தேதியிலிருந்து ஒப்பந்தசெவிலியர்கள் பணி பாதுகாப்பு,நிரந்தர பணி கோரி தமிழகம்முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணிவழங்குவதாக சுகாதாரத் துறைஅமைச்சர் அறிவித்தார் அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக நேற்று சுகாதாரதுறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 காலிப் பணியிடங்களை மாவட்ட ஆட்சியர்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பவுள்ளனர். கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இந்த காலிப் பணியிடங்கள் நிரப்புவதில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

தேர்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் பெற்றுவிட்டாலே பணிகிடைத்துவிடும். 20 மாதம் கரோனாபணியாற்றியிருந்தால் மாதத்துக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 40மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.

ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த தேர்வில் பங்கேற்கலாம். கரோனா காலத்தில் பணியாற்றியதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுவதால் 2,600 செவிலியர்களுக்கு எளிதாக பணி கிடைத்துவிடும். இதற்கு முன்பு செவிலியர்கள் ரூ.14ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. இந்த பணியில் சேர்ந்தால்ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

இது தற்காலிக ஒப்பந்த பணியாகும். இந்த வாய்ப்பை செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா கால செவிலியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறினால், வேறுபுதிய செவிலியர்கள் பணியில்சேர்ந்துவிடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் செவிலியர்களில் சுமார் 500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.ராஜேஷிடம் கேட்டபோது, “கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிக ஒப்பந்த பணி தேவையில்லை. பணி பாதுகாப்பு, நிரந்தர பணிதான் வேண்டும். எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தகட்டமாக வரும் 12-ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x