

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பூங்காக்கள் பல புதர்மண்டி கிடக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் பல உள்ளன. இவற்றில் சில வெறும் தரைகளாக காட்சி அளிக்கும் நிலையில், திண்டுக்கல் ஆர்.எம்.காலனி, விவேகானந்தா நகர் பகுதிகளில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள பூங்காவை, அப்போதைய அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட பாதை, சிறுவர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல், முதியவர்கள் ஓய்வாக அமர இருக்கைகள், குரோட்டன்ஸ் செடிகள், பூச்செடிகள், செயற்கை நீரூற்று என அழகுற அமைக்கப்பட்ட ஆர்.எம்.காலனி பூங்கா அப்பகுதி மக்களின் வரவேற்பை பெற்றதால் நகரின் பல பகுதிகளில் இருந்தும் இந்த பூங்காவுக்கு குழந்தைகளுடன் சென்று மக்கள் பொழுதை கழித்தனர்.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பராமரிப்பு இன்றி இப்பூங்கா தற்போது புதர்மண்டி காணப்படுகிறது. இதேபோல் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் விவேகானந்தா நகரில் அமைக்கப்பட்ட பூங்கா பணிகள் முழுமையடையாத நிலையில் பாதியில் கைவிடப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே பூங்கா அமையவுள்ளதால் நடைப்பயிற்சி, பொழுதுபோக்குக்கு ஏதுவாக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டதால் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு நிதி 50 சதவீதம், மாநில அரசு நிதி 50 சதவீத பங்களிப்புடன் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. ஆர்.எம்.காலனி பூங்கா பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், விவேகானந்தா நகர் பூங்கா நிதி பற்றாக்குறையால் ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்காததால் பாதியில் நிற்கிறது.
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள பூங்காக்களை பராமரிக்க தனியார் முன்வர வேண்டும். பூங்காவுக்குத் தேவையான குடிநீர் இணைப்பு, விளக்கு வசதி மட்டுமே மாநகராட்சியில் செய்து தரப்படும்.
காவலாளி ஊதியம், பராமரிப்பு ஆகிய செலவுகளை ஏதேனும் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள முன்வந்தால், அவர்கள் பராமரிப்பில் விடலாம் என அறிவித்தும் யாரும் முன்வரவில்லை. இதனால் பூங்காக்களை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் பூங்காக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.