

மதுரை: திமுக தலைமை அறிவித்த மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் தனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பெற்று தந்ததன் மூலம் தனது செல்வாக்கை மாவட்ட செயலாளர் எம்.மணிமாறன் நிரூபித்துவிட்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.
மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. எனினும் இதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தேர்வான நிர்வாகிகள் பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.
ஒன்றியம் வாரியாக அவைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர்கள் 3 பேர், பொருளாளர், மாவட்டப் பிரதிநிதிகள் 3 பேர் என தலா 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்கள் கட்சியில் நிர்வாக ரீதியில் 16 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒன்றியங்களில் கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட திமுக செயலாளர்கள் விவரம்: திருமங்கலம் கிழக்கு- து.தங்கப்பாண்டியன், திருமங்கலம் மேற்கு- கொ.தனபாண்டியன், திருமங்கலம் தெற்கு- ஆர்.வி.சண்முகம். டி.கல்லுப்பட்டி கிழக்கு- த.பாண்டியன், கல்லுப்பட்டி வடக்கு- வி.நாகராஜன், கல்லுப்பட்டி தெற்கு- த.தனசேகரன்.
கள்ளிக்குடி வடக்கு- கே.எஸ்.ராமமூர்த்தி, கள்ளிக்குடி தெற்கு- பா.மதன்குமார். உசிலம்பட்டி வடக்கு- க.அலெக்ஸ்பாண்டி, உசிலம்பட்டி மேற்கு- எம்.பி.பழனி, உசிலம்பட்டி தெற்கு - எஸ்.முருகன். செல்லம்பட்டி வடக்கு - செ.சுதாகரன், செல்லம்பட்டி தெற்கு- த.முத்துராமன்.
சேடப்பட்டி மேற்கு- மு.செல்வபிரகாஷ், சேடப்பட்டி வடக்கு- இ.ஜெயச்சந்திரன், சேடப்பட்டி தெற்கு- கு.சங்கரபாண்டியன். இவர்கள் அனைவரும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறனின் ஆதரவாளர்கள். அவரது சிபாரிசின் பேரிலேயே ஒன்றியச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உசிலம்பட்டி, திருமங்கலம் நகர் செயலாளர்களும் அவரது ஆதரவாளர்களே.
இது குறித்து தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அமைச்சர் பி.மூர்த்தியால் மாவட்டச் செயலாளராக கொண்டு வரப்பட்டவர் எம்.மணிமாறன். இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் இருவரும் பிரிந்தனர்.
இதனால் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளில் ஒரு பகுதியினர் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர்களாக செயல்பட்டனர். இவர்கள் ஒன்றிய செயலாளர் தேர்தலில் மணிமாறனின் ஆதரவாளர்களுக்கு கடும் போட்டியை அளித்தனர். இதனால் செயலாளர்களை தேர்வு செய்வது தாமதமானது.
மாவட்ட செயலாளர் தேர்தலிலும் மணிமாறனுக்கு எதிராக களம் இறங்க தனி அணியை உருவாக்கினர். இதில் மணிமாறன் கடும் நெருக்கடிக்கு ஆளானார். இந்நிலையில், மாவட்ட செயலாளர் தேர்தல் மனு தாக்கலுக்கு முதல் நாளில் மணிமாறனின் தந்தை முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா இறந்தார்.
இதனால் மணிமாறனுக்கே மாவட்டச் செயலாளர் பதவி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டதால், அவருக்கு எதிராக யாரும் மனு தாக்கலே செய்யவில்லை. மீண்டும் மாவட்டச் செயலாளரான மணிமாறன், அமைச்சர் மூர்த்தியுடன் மீண்டும் நட்பாக பழக தொடங்கினார். இந்நிலையில், மதுரை மாநகர் திமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ஆதரவாளரான அதலை செந்திலை கொண்டுவர முயற்சித்தார்.
இதை தடுக்க அமைச்சர் மூர்த்தியுடன் எம்.மணிமாறன் இணைந்துசெயல்பட்டார். இதனால் கோ.தளபதி மாவட்டச் செயலாளரானார். இந்த சூழலில் மீண்டும் தெற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் தேர்வு பட்டியல் தயாரானது. இதில் அமைச்சர் மூர்த்தி தலையிடாமல் ஒதுங்கிக்கொண்டார்.
எனினும் அவரை திருப்திப்படுத்த அமைச்சரின் ஆதரவாளர்கள் உக்கிரபாண்டி, சுப்பாரெட்டி உள்ளிட்ட சிலருக்கு மணிமாறனே பதவியை பெற்றுத் தருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை அறிவிக்கச் செய்து மணிமாறன் கட்சியில் தனக்குள்ள செல்வாக்கை நிரூபித்துவிட்டார்.
இதில் அமைச்சருக்கு விசுவாசமாக செயல்பட்ட சிலர் ஏமாற்றமடைந்தாலும் அதை வெளிக்காட்ட முடியவில்லை. தற்போது தெற்கு மாவட்டத்தில் புதிய பொறுப்புக்கு வந்துள்ள 28 பேரில் 25 பேர் வரை மணிமாறனின் தீவிர ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.