Published : 11 Jan 2023 04:27 AM
Last Updated : 11 Jan 2023 04:27 AM

பலமாக இருப்பதாக வல்லுநர்கள் அறிக்கை அளித்த பிறகும் பாம்பன் பாலத்தில் ரயில்களை இயக்க தாமதம் ஏன்?

ராமேசுவரம்: பாம்பன் ரயில் பாலம் பலமாக இருப்பதாக வல்லுநர்கள் அறிக்கை அளித்த பிறகும், மீண்டும் ரயிலை இயக்குவது குறித்து முடிவு செய்ய வேண்டிய அதிகாரி பணி ஓய்வுபெறும் நிலையில் இருப்பதால் முடிவெடுக்க முடி யாமல் இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் பாம்பன் பாலம் வழியே ராமேசுவரத்துக்கு ரயில்களை இயக்குவது தாமதமாகிறது.

தொழில் நுட்பக் கோளாறு: பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் டிச.23-ம் தேதி தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ராமேசுவரம் செல்லும் அனைத்து ரயில்களும் அன்று முதல் மண்டபம், ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களுடன் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து மீண்டும் இயக்கப்படுகின்றன.

மறு அறிவிப்பு வரும் வரை: இன்று (ஜன.11) வரை மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் இயக்கம் ரத்து செய் யப்படுகிறது என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

என்னதான் பிரச்சினை?: பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் முதன் முறையாக 2018-ம்ஆண்டு டிசம்பர் மாதம் 20 அடிக்கும் மேலான விரிசல் கண்டுபி டிக்கப்பட்டது. தொடர்ந்து 400 டன் எடை கொண்ட தூக்குப் பாலத்தை வலுப்படுத்தும் பணிகள் ஐஐடி வல்லுநர்களின் உதவியுடன் மூன்று மாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகே ராமேசுவரத்துக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் மீண்டும் டிச.23-ல் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டது. டிசம்பர் 25 அன்று ரயில்வே பொறியாளர்களுடன் இணைந்து சென்னை ஐஐடி வல்லுநர்கள், ஏழு காலி ரயில் பெட்டிகளுடன் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்தினர். அப்போது தூக்குப் பாலத்தின் தண்டவாளத்தில் அதிர்வு, அலாய் மெண்ட் ஸ்கேனர், சென்சார், எக்கோ சவுண்ட் கருவிகள் மூலம் ஆய்வு செய்து தூக்குப் பாலம் வலுவாக உள்ளதாக ஐஐடி வல்லுநர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஜன.5 அன்று லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஐஐடி வல்லுநர்கள், லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவன அதிகாரிகள் ஆகி யோர் அளித்த அறிக்கைகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெறுகிறார்: மேலும் பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயிலை இயக்க முடிவெடிக்க வேண்டிய அதிகாரி பணி ஓய்வுபெறும் நிலையில் இருப்பதாகவும், ரயில் இயக்க அனுமதி அளித்து அசம்பா விதங்கள் ஏதும் நடைபெற்றால் ரயில்வே அமைச்சகத்துக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்தில் முடிவெடுக்க முடி யாமல் இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் ரயில் சேவை நிறுத்தப்பட்ட 20 நாட்களில் பாம் பன் ரயில் தூக்குப் பாலத்தில் பராமரிப்புப் பணி எதுவும் நடைபெறவில்லை. இதனால் ராமேசுவரத்துக்கு ரயிலில் வரும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x