

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் இன்று புதிய பகுதிநேர ரேசன் கடையை சு.வெங்கடேசன் எம்பி திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
இவ்விழாவில், கூட்டுறவுசங்க மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூரத்தி, சார்பதிவாளர் பொ.பரமசிவம், கொட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் எம்பி கூறியதாவது: ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிடாமல் தமிழக ஆளுநர் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டு அரசின் இலட்சினையும் புறக்கணிக்கப்பட்டு, மத்திய அரசின் இலட்சினை இடம் பெற்றுள்ளது. ஆளுநர் அரசியலமைப்பு அட்டவணையை மீறி செயல்படுகிறார்.
ஆளுநர் அரசியல் சாசன எல்லையை மீறுவது என முடிவெடுத்து செயல்படுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானாவில், மத்திய நிதியமைச்சர் ரேசன் கடையில் பிரதமரின் புகைப்படம் இல்லை எனக்கூறி பிரச்சினை செய்தனர். தற்போது தமிழ்நாடு ஆளுநரின் அழைப்பில் தமிழ்நாட்டு அரசின் இலட்சினை இல்லாததற்கு அவர்கள் என்ன பதில் சொல்லப்போகின்றனர். ஆளுநர் ஆறரை கோடி தமிழர்களின் உணர்வோடு விளையாடுகிறார், என்றார்.
மதுரை கொட்டாம்பட்டியில் இன்று புதிய ரேசன் கடையை திறந்துவைத்து பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார் சு.வெங்கடேசன் எம்பி.