Published : 10 Jan 2023 04:05 AM
Last Updated : 10 Jan 2023 04:05 AM
சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.
வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை கொண்டாட பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னை, பெங்களூருலிருந்து சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகின்றன.
அதுபோல, சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் விழுப்புரத்துக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பயணிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு ஊர் திரும்ப ஏதுவாக வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளன. சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளன.
மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களின் நகரப்பகுதிகளில் அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப இரவு முழுவதும் நகரப்பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT