

சென்னை: கடற்கரையோரங்களில் கிடைக்கும் கனிமவளத்தை வணிகரீதியில் பிரித்தெடுத்து, சந்தைப்படுத்த தமிழ்நாடு கனிம நிறுவனம், ஐஆர்இஎல் (இந்தியா) நிறுவனம் இடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கிடைக்கக்கூடிய கனிம வளங்களை விஞ்ஞானரீதியாகவும், சுற்றுச்சூழல் மாசுபடாதவாறும் எடுக்க வேண்டும், அதன் மூலம் பல்வேறு உபதொழில்கள் தொடங்கி தொழில்வளத்தைப் பெருக்க வேண்டும், கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையாகும்.
கடற்கரையோர கனிமங்களின் சுரங்க அனுமதி, அரசு நிறுவனங்கள், அரசுக்குச் சொந்தமான அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று அணுசக்தி கனிம அனுமதி விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அரசின் ஐ.ஆர்.இ.எல். (இந்தியா) நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு கனிமநிறுவனமும் இணைந்து, தமிழகத்தின் தென் மாவட்ட கடற்கரையோர கனிம வளங்களை, குறிப்பாக கார்னட், இலுமினைட், ஜிர்கான், ரூட்டைல் போன்ற கனிமங்களைப் பிரித்தெடுத்து, சந்தைப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு கனிம நிறுவனமும், ஐ.ஆர்.இ.எல். (இந்தியா) நிறுவனமும் இணைந்து,புதிய நிறுவனம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கடலோர கனிமங்களைப் பிரித்தெடுக்கவும், அதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மேம்படுத்தவும் வழிவகை செய்யும். அதன்மூலம் அணுசக்தித் துறைக்குத் தேவையான கனிமங்கள் கிடைக்க செய்வதுடன், பிற தொழில்களுக்கு இதரகனிமங்கள் கிடைக்கவும் உதவும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கண்டறியப்பட்டுள்ள தேரி மணல் இருப்பு சுமார் 52 மில்லியன் டன்னாகும். இதைக் கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் குதிரைமொழி மற்றும் சாத்தான்குளம் ஆகிய இடங்களில் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் 2 தொழிற்சாலைகள் தலா ரூ.1,500 கோடி முதலீட்டில் நிறுவப்பட உள்ளன.
அதன்மூலம், ஆண்டுக்கு ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் ரூ.1,075 கோடி வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதுடன், நேரடியாகவும், மறைமுகமாகவும் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர்வெ.இறையன்பு, தொழில் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், மத்திய அரசின் அணுசக்தி துறைத் தலைவர் மற்றும் செயலர் கே.என்.வியாஷ், தமிழ்நாடு கனிம நிறுவனமேலாண் இயக்குநர் சுதீப் ஜெயின்,ஐ.ஆர்.இ.எல். (இந்தியா) நிறுவனத்தலைவர் டி.சிங் பங்கேற்றனர்.