

சென்னை: மரபுகளை மீறி சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: ஆளுநர் தனது உரையில் இடம் பெற்றிருந்த சில குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்துவிட்டு, இடம் பெறாத சில வார்த்தைகளை கூறியது அரசியல் சட்ட விதிமீறலோடு, மரபுகளை புறக்கணிப்பதாகும். இதுஅரசமைப்புச் சட்டத்துக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்:ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டபேரவையின் மாண்புக்கு நீங்கா களங்கம் ஏற்படுத்தியிருப்பது உச்சமட்ட அத்துமீறலாகும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஒப்புதல் அளிக்கப்பட்ட உரையைஆளுநர் முழுமையாக படிக்காதது ஜனநாயகத்துக்கு எந்த வகையிலும் வலிமை சேர்க்காது. அவை மரபுகளுக்கு மாறாக, ஆளுநர் வெளியேறியதும் சட்டப்பேரவை மரபுகள் மற்றும் நாகரிகத்துக்கு எதிரானது.
விசிக தலைவர் திருமாவளவன்: ஆளுநர் பதவியில் நீடிக்கும் தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். அவரை திரும்பப் பெறவலியுறுத்தி விசிக சார்பில் ஜன.13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போரட்டம் நடத்தப்படும்
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்ஆகியோரும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘‘ஆளுநரை வெளியேற்ற வலியுறுத்தி வரும் 20-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.