தேர்தல் சீர்திருத்தப் பரிந்துரைகளை அரசு செயல்படுத்த தேர்தல் ஆணையம் வலியுறுத்த வேண்டும்: அன்புமணி

தேர்தல் சீர்திருத்தப் பரிந்துரைகளை அரசு செயல்படுத்த தேர்தல் ஆணையம் வலியுறுத்த வேண்டும்: அன்புமணி
Updated on
3 min read

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான 47 பரிந்துரைகளையும் விரைந்து செயல்படுத்தும்படி அரசை தேர்தல் ஆணையம் வலியுறுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தலை ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 47 தேர்தல் சீர்திருத்தங்களை மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்திருத்திருக்கிறார். தேர்தல் களத்தை தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன் கூடிய இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஏற்பாட்டில் டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த தேசிய மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நஜீம் ஜைதி, தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிமுகவினரும், திமுகவினரும் போட்டிப்போட்டுக் கொண்டு பணம் கொடுக்கப்பட்டது குறித்தும், அதைத்தொடர்ந்து அத்தொகுதிகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது குறித்தும் விரிவாக விளக்கியிருக்கிறார்.

தேர்தல் சீர்திருத்தம் குறித்த மாநாடுகளில், தேர்தல் ஊழலுக்கு உதாரணமாக குறிப்பிடப்படும் அளவுக்கு தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளின் நிலைமை ஆகிவிட்டது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவமானமளிக்கும் விஷயமாகும்.

அதேநேரத்தில், இத்தகைய நிகழ்வுகள் நீடிக்கக்கூடாது என்றும், அதற்கான நடவடிக்கைகளை தலைமை தேர்தல் ஆணையர் குறிப்பிட்டிருப்பது ஓரளவு மனநிறைவளிக்கிறது. ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324 ஆவது பிரிவை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை விட நன்றாக வரையறுக்கப்பட்ட தேர்தல் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்புகிறது.

அதேநேரத்தில், 324ஆவது பிரிவை பயன்படுத்த நாங்கள் தயங்கமாட்டோம். அண்மையில் தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களை இச்சட்டத்தைப் பயன்படுத்தி தான் ரத்து செய்தோம். தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்வதற்கான வசதி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

இதற்காக தேர்தலில் பணபலத்தை தடுத்தல், அரசியல் கட்சிகளுக்கு நிதிவழங்குவதை வெளிப்படையாக்குதல், ஓட்டுக்கு பணம் தருவதை பிணையில் விடுதலை ஆக முடியாத குற்றமாக மாற்றுதல், பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுவதை கிரிமினல் குற்றமாக மாற்றுதல், ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாக்குச்சாவடிகளை கைப்பற்றினாலும் தேர்தலை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குதல் உள்ளிட்ட 47 பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்யும்படி சட்ட அமைச்சகத்தை கேட்டுக் கொண்டிருக்கிறோம்'' என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்திருக்கிறார்.

தலைமைத் தேர்தல் ஆணையரின் இந்த வாக்குறுதிகள் செயல் வடிவம் பெற வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால், கடந்த காலங்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையவில்லை.

கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவும், திமுகவும் பணத்தை வெள்ளமாக பாயவிட்டனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும், அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மறைக்கவே முடியாது என்ற அளவுக்கு முறைகேடுகள் அதிகம் நடைபெற்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சித் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்தத் தொகுதிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைத்தது போன்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்யவேண்டும்; இனிவரும் தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 06.06.2016 அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை டெல்லியில் சந்தித்து கூறினேன். ஆனால், அவரோ எனது கோரிக்கையில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டதுடன், அவற்றை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்படி கோரினார்.

ஆனால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அரசியலமைப்பு சட்டத்தின் 324ஆவது பிரிவைப் பயன்படுத்தி அத்தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்த ஆணையத்தால், அதேசட்டத்தை பயன்படுத்தி இரு திராவிடக் கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாதது விந்தையிலும் விந்தை.

இதேகோரிக்கையை வலியுறுத்தி 18.11.2016 அன்று தேர்தல் ஆணையத்தில் நான் அளித்த மனுவின் மீதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அந்த இரு தொகுதிகளிலும் அதே கட்சிகள், அதே வேட்பாளர்கள், அதே பணம், அதே ஊழல் என்ற நிலை ஏற்பட்டது. இனியும் இந்த நிலை நீடித்தால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்.

பணம் இருப்பவர்கள் மட்டும்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகும். அத்தகைய நிலை ஏற்பட்டால் இந்தியாவில் பிரதமராகவும், முதல்வர்களாகவும் யார் வரவேண்டும் என்பதை இந்தியாவின் 5 பெரிய பணக்காரர்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். அது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலைக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான 47 பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருப்பது நம்பிக்கையளிக்கிறது.

இந்தியாவில் தேர்தல் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே பாமக போராடி வருகிறது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். எனது நிலைப்பாட்டை அவர்கள் ஆதரித்தனர். அத்துடன், நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் தமது நிலைப்பாடு என்றும் பிரதமர் கூறினார்.

மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனையும் இதுதொடர்பாக சந்தித்து பேசியிருக்கிறேன். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்க வேண்டும். அக்குழு தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி அடுத்த ஓராண்டுக்கு மக்களிடம் கருத்து கேட்டு அறிக்கை அளிக்க வேண்டும். அதனடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவரும் இந்த கோரிக்கையை ஆய்வு செய்வதாக கூறியிருக்கிறார்.

தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவை திரட்டும் நோக்குடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசியுள்ளேன். மற்ற தலைவர்களையும் விரைவில் சந்தித்து பேசவுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இதுதொடர்பாக விரிவான கடிதம் விரைவில் எழுதுவதற்கும் திட்டமிட்டிருக்கிறேன்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் நான் வலியுறுத்தியுள்ளேன். இனிவரும் நாட்களிலும், தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்படி நிலைக்குழு மூலம் மத்திய அரசை வலியுறுத்துவேன். அதேபோல், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான 47 பரிந்துரைகளையும் விரைந்து செயல்படுத்தும்படி அரசை தேர்தல் ஆணையம் வலியுறுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in