எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரம்: பேரவை தலைவரை இன்று சந்தித்து மீண்டும் வலியுறுத்த பழனிசாமி திட்டம்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரம்: பேரவை தலைவரை இன்று சந்தித்து மீண்டும் வலியுறுத்த பழனிசாமி திட்டம்
Updated on
1 min read

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவை தலைவரை இன்று சந்தித்து வலியுறுத்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. வரும் 13-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமைஅலுவலகத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

பழனிசாமி அறிவுறுத்தல்: இதில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அரசுக்கு எதிராக நடைபெறும் தொடர் போராட்டங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் உள்ள குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேச வேண்டும் என பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க ஏற்கெனவே பழனிசாமி தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், இன்று மீண்டும் பேரவைத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது, முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றுவது குறித்து வலியுறுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் கூட்டத் தொடரை புறக்கணிப்பது எனவும் கூட்டத்தில் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in