Published : 10 Jan 2023 04:15 AM
Last Updated : 10 Jan 2023 04:15 AM
ராமேசுவரம்: மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், ராமேசுவரத்தில் மோடிக்கு எதிராக போஸ்டர் அடித்ததாக காங்கிரஸ் நிர்வாகி மீது ராமேசுவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரு இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் வதோதரா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், அதில் ஒரு தொகுதி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி என்றும், மற்றொரு தொகுதி தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதி என்றும் தகவல் பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து , ராமேசுவரம் நகர் காங்கிரஸ் தலைவர் ஜோ.ராஜீவ் காந்தி, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்து ராமேசுவரம் தீவு முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் , நிச்சயம் படுதோல்வி... லட்சியம் நோட்டாவுடன் போட்டி... ராமேசுவரத்தில் மண்ணைக் கவ்வுவது உறுதி. அதுக்கு நாங்க கேரண்டி. மோடி அவர்களே.. மனசை தளர விடாம இங்கே வந்து நிற்க வேண்டியது உங்க கடமை... தரமா தோற்கடிப்பது எங்க கடமை...
ஒத்த ஓட்டு பாஜக என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ராமேசுவரம் காவல்நிலையத்தில் நகர் பாஜக தலைவர் ஸ்ரீதர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம் நகர் காங்கிரஸ் தலைவர் ஜோ.ராஜீவ்காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT