

சென்னை: 2021-ம் ஆண்டு அதிக சாலை விபத்துகள் ஏற்பட்ட பெருநகரங்களின் பட்டியிலில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. மேலும், சாலை விபத்துகளில் அதிகமானோர் மரணம் அடைந்த பட்டியலில் சென்னையில் 2-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றால், நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதன் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தலைகவசம், சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல், அதிவேகத்தில் வாகனத்தை இயக்குதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், ஒருவழிப்பாதையில் செல்லுதல் போன்ற சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தை இயக்குவதால் விபத்துகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், 2021-ம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட சாலை விபத்துகள் குறித்த அறிக்கையை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி கடந்த 2021-ம் ஆண்டில் டெல்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 50 பெருநகரங்களில் 67,301 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில், 15,350 பேர் உயிரிழந்தனர்; 58,758 பேர் காயமடைந்தனர்.
கடந்த 2020-ம் ஆண்டில் 58 ஆயிரத்து 736 பேர் சாலை விபத்துகளில் சிக்கி, 13 ஆயிரத்து 542 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்து 736 பேர் காயம் அடைந்துள்ளனர். இவற்றை விட கூடுதலாக, 8,565 சாலை விபத்துகள், 2021-ல் பெருநகரங்களில் பதிவாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 5,034 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2020-ல், 4,389 விபத்துகள் பதிவாகி இருந்தது. இதன் வாயிலாக, 2020 மற்றும் 2021 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அதிக விபத்துகள் நடந்த பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
மேலும், உயிரிழந்தோர் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அங்கு, 4,720 பேர் விபத்துகளில் சிக்கி 1,239 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 998 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் வாயிலாக, விபத்தில் சிக்கி உயிரிழப்பிலும், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சென்னை இரண்டாம் இடம்பிடித்துள்ளது.
இதைதவிர, வாகனங்களை வேகமாக இயக்குவதும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. கடந்த 2021-ல் பதிவான விபத்துகளில், 45 ஆயிரத்து 942 பேர் அதிவேகத்தில் வாகனத்தில் ஓட்டியுள்ளனர். அதில், 9,985 பேர் உயிரிழந்த நிலையில், 41 ஆயிரத்து 229 பேர் காயமடைந்தனர். இந்தப் பட்டியலிலும் சென்னை மாநகரம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னையில், 4,880 விபத்துகள் அதிவேக வாகனங்கள் ஓட்டியதால் விபத்தில் சிக்கி உள்ளனர்.
மேலும், கோவை மாநகரம் அதிக விபத்துகள் பட்டியலில் 27-வது இடத்திலும், உயிரிழப்பில் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது. அங்கு, 886 பேர் விபத்தில் சிக்கி, 234 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாநகரம் அதிக விபத்துகள் நடந்த பட்டியலில் 33-வது இடத்திலும், உயிரிழந்தோர் பட்டியலில் 36-வது இடத்திலும் உள்ளது. அங்கு, 618 பேர் விபத்தில் சிக்கி, 154 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாநகரம் அதிக விபத்துகள் நடந்த பட்டியலில் 41-வது இடத்தையும், உயிரிழந்தோர் பட்டியலில் 42-வது இடத்தையும் பிடித்துள்ளது. அங்கு, 339 பேர் விபத்தில் சிக்கி, 130 பேர் உயிரிழந்துள்ளனர்.