

சென்னை: தமிழ் இலக்கியத்திலுள்ள சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க ஒரு சிறப்பு நல்கையை (special grant) தமிழக அரசு வழங்கும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜன.9) ஆற்றிய ஆளுநர் உரையில், "கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்ய, நாட்டிற்கே முன்னோடியாக, மாபெரும் கற்றல் திட்டமான ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இரண்டு இலட்சம் தன்னார்வலர்களின் உதவியுடன், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 34 இலட்சம் மாணவர்கள் இத்திட்டத்தினால் பயன் பெறுகின்றனர்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான J-PAL மேற்கொண்ட ஆய்வின்படி, ஆறு மாதங்களில் ஒட்டுமொத்த கற்றல் இழப்பில் 25 சதவீதம் வரை ஈடுசெய்யப்பட்டுள்ளதில், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் பெரும் பங்கை ஆற்றியுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை கூட்டங்களுடன் நடத்தப்பட்ட ‘கல்வி மாற்றம் உச்சி மாநாட்டில்’, இந்த ஆய்வின் முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்டதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 2025 ஆம் ஆண்டுக்குள், தொடக்கப் பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளும் புரிதலுடன் படிக்கவும், எண்கணிதத்தில் திறன் பெறுவதற்கும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதன் மூலம் ஒவ்வொரு மாணவரையும் முழுமையான வளர்ச்சி அடையச் செய்வதே இந்த அரசின் முக்கியக் குறிக்கோளாகும். இந்த நோக்கத்தை எய்திட, அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இத்திட்டத்திற்கு 1,430 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 7,200 புதிய வகுப்பறைகள் 1,050 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.
45 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சென்னை புத்தகக் கண்காட்சியை உலகத்தரத்திற்கு இவ்வாண்டு உயர்த்தும் வகையில், முதன்முறையாக சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை 16.01.2023 முதல் 18.01.2023 வரை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. தமிழ் பதிப்பாளர்களுக்கும், உலகளாவிய பதிப்பகத் துறைக்கும் இடையே, அறிவுப் பரிமாற்றம், பதிப்புரிமை பரிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதே இந்த புத்தகக் கண்காட்சியின் நோக்கமாகும். “
தாயெழில் தமிழை, எந்தன் தமிழரின் கவிதை தன்னை, ஆயிரம் மொழியிற் காணும் நாள் எந்நாளோ” என்ற பாவேந்தரின் கனவை நனவாக்கும் வகையில், தமிழ் இலக்கியத்திலுள்ள சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க ஒரு சிறப்பு நல்கையை (special grant) தமிழ்நாடு அரசு வழங்கும்" இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.