Published : 09 Jan 2023 03:45 PM
Last Updated : 09 Jan 2023 03:45 PM

நீட் விலக்கு மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஆளுநர் உரையில் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவை | கோப்புப் படம்

சென்னை: “நீட் விலக்கு மசோதா குறித்து கோரப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்ட முன்வடிவிற்கான ஒப்புதலை விரைந்து வழங்க தமிழக அரசு வலியுறுத்துகிறது” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜன.9) உரையாற்றினார். அந்த உரையில்,"நாட்டிலேயே பல்வேறு சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. குழந்தை இறப்பு விகிதம், தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பெருமளவில் குறைத்து, 2030-ஆம் ஆண்டில் எட்டப்பட வேண்டிய நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை தமிழ்நாடு ஏற்கெனவே எட்டியுள்ளது.

அதிகரித்து வரும் தொற்று அல்லாத நோய்களின் பாதிப்பை போக்கும் வகையில், மக்களின் வீட்டிற்கே சென்று கட்டணமின்றி மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற முன்னோடித் திட்டத்தை இந்த அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 1.01 கோடி மக்கள் தங்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விபத்து நேர்ந்த முதல் 48 மணி நேரத்தில் அவசர மருத்துவச் சேவையை அனைவருக்கும் கட்டணமின்றி வழங்குவதற்காக, நாட்டிலேயே முதன்முறையாக ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ என்ற உன்னதத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலமெங்கும் உள்ள 679 மருத்துவமனைகளில் இதுவரை 1.35 இலட்சம் விபத்துக்குள்ளானவர்களுக்கு 120.58 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகள் எவ்விதக் கட்டணமுமின்றி வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், எண்ணற்ற விலைமதிப்பில்லா உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.

அண்மையில், சில நாடுகளில் ஒமிக்ரானின் உருமாறிய ஒரு புதிய வகை வைரஸ் காரணமாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது, மூன்றாவது அலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்த அரசு, மாநிலத்தில் போதிய மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்து, எதிர்வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

நீட் தேர்வு முறையானது, கிராமப்புற ஏழை மாணவர்களை மிகவும் பாதிப்பதாகவும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு, இது குறித்து ஆய்வு செய்வதற்காக, நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவை இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இச்சட்டம் குறித்து கோரப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்ட முன்வடிவிற்கான ஒப்புதலை விரைந்து வழங்க இந்த அரசு வலியுறுத்துகிறது" என்று அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x