

புதுச்சேரி: “புதுச்சேரியில் ரெஸ்டோ பார் பெயரில் மது விடுதிகளில் காபரே நடனம் நடக்கிறது. பத்து நாட்களுக்குள் முதல்வர் ரங்கசாமி ரத்து செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும்" என்று அதிமுக எச்சரித்துள்ளது.
ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் புதுச்சேரி மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "புதுசேரி மாநிலத்தை நவீன கேபரே கவர்ச்சி நடன பூமியாக முதல்வர் ரங்கசாமி மாற்றி வருகிறார். கவர்ச்சி நடன பார், காபரே நடனங்களை ஊக்கப்படுத்தும் முதல்வர் ரங்கசாமியை காமராஜர் ஆன்மா விரைவில் தண்டிக்கும்.
புதுச்சேரி நகர ஒயிட் டவுன் பகுதியில் மட்டும் சுற்றுலா மதுபான பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரெஸ்டோபார் என கவர்ச்சி நடன பார்கள் 200-க்கும் மேற்பட்டவற்றுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த புத்தாண்டில் குக்கிராமங்களில் கூட கவர்ச்சி நடனங்கள் அரங்கேறியுள்ளது. சுற்றுலா மதுபான உரிமத்தில் ரெஸ்டோ பார், பப், டிஸ்கொத்தே நடத்த அனுமதியே இல்லை.
அனுமதியின்றி கேளிக்கை நடனம் என்ற பெயரில் காபரே நடனம் நடத்தப்பட்டு வருகிறது. ஆட்சியர், காவல் துறையினர் இதை தடுக்காமல், பாதுகாப்பு அளித்து வருகின்றனர். சுற்றுலா மதுபான உரிமத்தில் அமர்ந்து மது அருந்த மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும். ரெஸ்டோ பார்களில் பெண்களுக்கு மது இலவசம் என விளம்பரம் செய்கின்றனர்.
கடந்த 2006-ல் கலாச்சார நடனம் என்ற பெயரில் கேபரே டான்ஸ் புதுச்சேரியில் நடப்பதை ஜெயலலிதா எதிர்த்தார். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தக்கூடிய டான்ஸ்க்கு 2006-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் பொங்கல் விடுமுறை முடிவதற்கு முன்பு 2021 முதல் வழங்கப்பட்ட சுற்றுலா மது பார் என்ற பெயரில் ரெஸ்டோபாருக்கு வழங்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட அனைத்து அனுமதியையும் முதல்வர் ரங்கசாமி ரத்து செய்ய வேண்டும்.
இதை அதிமுக சார்பில் கெடுவாக விதிக்கிறோம். இல்லாவிட்டால், கட்சித் தலைமை அனுமதி பெற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இதிலிருந்து அரசியல்வாதிகள் தப்பலாம். ஆனால், அதிகாரிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். அவர்களால் தப்பிக்க முடியாது. அரசு துறை அதிகாரிகள் அரசியல் வாதிகள் பேச்சைக் கேட்டு சட்டத்தை மீற வேண்டாம்.
புதுச்சேரியில் 30 தொகுதிகளைச் சேர்ந்த பெண்களும், வருங்கால சந்ததிகளைக் காக்க மதுபார் தொடர்பான பிரச்சினைகளுக்கு என்னை அணுகலாம். அவர்களுக்கு சட்ட ரீதியிலான உதவிகளை செய்ய தயாராக உள்ளேன்" என்று வையாபுரி மணிகண்டன் கூறினார்.