

புதுச்சேரி: புதுச்சேரியில் நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள பாஜக ஆதரவு ஏனாம் சுயேட்சை எம்எல்ஏவுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரங்கசாமியை தோற்கடித்து சுயேட்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி ஸ்ரீவாஸ் அசோக் வென்றார். மேலும் ஸ்ரீவாஸ் அசோக் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனிடையே, தனது தொகுதியில் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும், வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்று அசோக் குற்றம்சாட்டினார். இதனைக் கண்டித்து கடந்த மாதம் சட்டப்பேரவை வளாகத்தில் அசோக் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை அசோக் கைவிட்டார்.
இந்த நிலையில், முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் மீண்டும் ஏனாம் எம்.எல்.ஏ ஈடுபட்டு வருகிறார். நேற்றைய தினம் உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீநிவாஸ் அசோக் எம்எல்ஏவுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவர் சிகிச்சை அளித்தார். ஆனாலும், ஸ்ரீநிவாஸ் அசோக் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். 4-ம் நாளான இன்று போராட்டம் தொடர்ந்தது.
இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை தொலைபேசி மூலம் எம்எல்ஏ அசோக்கை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு எம்எல்ஏ, “தொகுதியில் நடைபெறாமல் இருக்கும் 15 கோரிக்கைகளை அடக்கிய கோப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக நிறைவேற்றித் தாருங்கள். என்னுடைய போராட்டத்தை கைவிடுகிறேன்” என தெரிவித்து ஸ்ரீநிவாஸ் அசோக் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.