

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேருக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த அக்.23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (26) மற்றும் போத்தனூரைச் சேர்ந்த முகமது தவ்பிக் (25), நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த உமர் பாரூக் (39), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ்கான் (28) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், முகமது அசாரூதீன் உள்ளிட்ட 5 பேரை ஏற்கெனவே என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில், முகமது தல்லா, முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக் உள்ளிட்ட 6 பேரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனு அளித்தனர்.
இந்த மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது. பின்னர், 6 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். மேலும், வரும் 17-ம் தேதி 6 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, 6 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். முதல்கட்டமாக அனைவரையும் பலத்த பாதுகாப்புடன் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டனர். அவர்களுடன் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடனும் தொடர்பு உள்ளதா அல்லது தீவிரவாத அமைப்புகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும், வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின்போது பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால், முழு விசாரணை நிறைவடைந்த பின்னர், உரிய விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் முழு விசாரணைநிறைவடைந்த பின்னர், உரிய விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.