அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட உத்தரவு

அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை சார்பில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவு: தந்தை பெரியாரின் சமூக நீதியையும், சமத்துவத்தையும் பேணும் வகையில் தமிழகத்தில் 238 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 149 சமத்துவபுரங்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான சமத்துவபுரங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சமத்துவபுரங்களில், அந்தந்த குடியிருப்போர் நலச் சங்கம் மூலம் வரும் 15-ம் தேதி சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட வேண்டும்.

இதையொட்டி, கோலப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள், கலாசார விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஏதாவது ஒரு சமத்துவபுரத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் ஆட்சியர்கள் பங்கேற்க வேண்டும்.

பொங்கல் விழா முழுவதையும் புகைப்படமாகவும், வீடியோ தொகுப்பாகவும் பதிவு செய்து, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரகத்துக்கு வரும் 23-ம் தேதிக்கு முன்பாக அனுப்பிவைக்க வேண்டும். அந்தந்தப் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓ), குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் இணைந்து பொங்கல் விழாவை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in