Published : 09 Jan 2023 06:11 AM
Last Updated : 09 Jan 2023 06:11 AM

புதுக்கோட்டை | 485 காளைகள் பங்கேற்புடன் தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு: 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகள்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சியில் தமிழகத்தில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், 485 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

ஆங்கிலப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தச்சன்குறிச்சியில் ஆண்டுதோறும் ஜன.2-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு ஜன.2-ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படாத நிலையில், ஜன.6-ல் நடத்த மாவட்டநிர்வாகம் அனுமதி அளித்தது.

ஆனால், ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், அன்றும்ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதை அடுத்து, தச்சன்குறிச்சியில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

நிகழாண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், மாநிலசட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வக்கோட்டை), வை.முத்துராஜா(புதுக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடக்கத்தில் கோயில் காளையும், அதன்பிறகு, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 485 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

இந்த காளைகளை அடக்குவதற்கு 150 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 71 பேர் காயமடைந்தனர். அதில், 21 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் அதிககாளைகளை அடக்கிய புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூரைச் சேர்ந்த யோகேஷ் முதல் பரிசையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தர் 2-ம் பரிசையும் பெற்றனர். சிறந்த காளைக்கான பரிசு தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடியைச் சேர்ந்தராஜ்குமாரின் காளைக்கு வழங்கப்பட்டது.

மேலும், சிறப்பாக செயல்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாதகாளைகளின் உரிமையாளர்களுக்கும் இருசக்கர வாகனம், அண்டா, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு என்பதால், பார்வையாளர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். கந்தர்வக்கோட்டை போலீஸார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x