Published : 09 Jan 2023 06:04 AM
Last Updated : 09 Jan 2023 06:04 AM

தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதால் வேறு மாநிலங்களுக்கு செல்லும் தொழில் முதலீடுகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: ஊழல் அதிகரித்துள்ள காரணத்தால் தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தேசிய தொழில் அமைப்பான ‘லகு உத்யோக் பாரதி’ சார்பில் தென் மண்டல மாநாடு கோவையில் நேற்று நடந்தது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ மாநாட்டை தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசும்போது, “இன்று பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உலக நாடுகள் தவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான சிறப்பான ஆட்சி காரணமாக இந்தியாவில் பாதிப்பு ஏற்படவில்லை. கரோனா தொற்று பரவல் காலத்திலும் தொழில்துறை நெருக்கடியில் இருந்து மீள உதவும் வகையில் அவசர கால கடனுதவி திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் எம்எஸ்எம்இ குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் ஊழல் அதிகரித்து காணப்படுவதால் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெறுதல் உள்ளிட்ட தொழில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் தொகையைலஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது. இந்த அவல நிலை காரணமாக தமிழகத்துக்கு வர வேண்டியதொழில் முதலீடுகள் பல கர்நாடகா,ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுள்ளன. இது நல்லதல்ல என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x