Published : 23 Jul 2014 01:05 PM
Last Updated : 23 Jul 2014 01:05 PM

இலங்கைப் போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கு விசா வழங்க வேண்டும்: ராமதாஸ்

உலகத் தமிழர்களின் உணர்வை மதித்து, இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்; ஐ.நா. போர்குற்ற விசாரணைக் குழுவினருக்கு விசா வழங்க மோடி அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டுவந்தது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இடைவிடாத முயற்சி காரணமாக இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆணையிடுவதற்கான தீர்மானம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் 16 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. அதிகாரி சாண்ட்ரா பெய்தாஸ் தலைமையிலான இந்தக்குழு இலங்கையில் விசாரணை நடத்த அனுமதி அளிக்க முடியாது அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அறிவித்துவிட்ட நிலையில், ஐ.நா. விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் என்று பல வாரங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.

அதைப்போலவே, இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்தும் நோக்குடன் ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக் குழுவினருக்கு விசா வேண்டி ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை, இலங்கை மனித உரிமை ஆணையர் பிரதீபா மஹனமஹேவா உறுதி செய்திருப்பதுடன், இலங்கைக்கு ஆதரவான இந்தியாவின் இந்த நிலைப்பாடு மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவிலும், மற்ற சார்க் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளிலும் விசாரணைக்குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தான் போர்க்குற்ற விசாரணையை அமெரிக்காவின் நியுயார்க், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா, தாய்லாந்தின் பாங்காக் ஆகிய நகரங்களில் நடத்த ஐ.நா. தீர்மானித்தாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி உண்மையாக இருந்தால் அது இந்தியாவின் மனித உரிமை வரலாற்றில் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி விடும். ஒருகாலத்தில் உலகில் எந்த மூலையில் மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் அதற்கு எதிரான முதல் குரல் இந்தியாவிலிருந்து தான் ஒலிக்கும். மனித உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) முதல் நெல்சன் மண்டேலா வரை அனைவருக்கும் மானசீக வழிகாட்டியாக போற்றப்படும் மகாத்மா காந்தியை இந்த உலகிற்கு வழங்கிய இந்தியா, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிரான விசாரணைக்கு முட்டுக்கட்டைப் போடுகிறது என்பதையும், மனித உரிமை ஆர்வலர்களுக்கு விசா தர மறுக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த செய்திகள் மனித உரிமை வரலாற்றில் கறுப்பு பக்கங்களாகவே அமையும்.

இலங்கை இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் எவ்வாறு துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இங்கிலாந்தின் சேனல்&4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப்படங்கள் தான் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. இந்த ஆவணப்படங்களை திரையிடுவதற்காக அதன் தயாரிப்பாளர் கெல்லம் மெக்ரே கடந்த ஆண்டு தில்லி வர விரும்பினார். ஆனால், அவருக்கு விசா வழங்க முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறுத்துவிட்டது. இந்தியாவின் இந்த முடிவு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. முந்தைய காங்கிரஸ் அரசு செய்த அதே தவறை நரேந்திர மோடி அரசும் செய்யக்கூடாது.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணி இராமதாசு தலைமையிலான குழு ஏற்கனவே வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளது. அதையும், உலகத் தமிழர்களின் உணர்வையும் மதித்து போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்; அதற்கு வசதியாக ஐ.நா. போர்குற்ற விசாரணைக்குழுவினருக்கு விசா வழங்க நரேந்திர மோடி அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x