

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது கர்நாடக மாநில அரசுப் பேருந்து மோதியதில் ராணுவ வீரர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பேருந்து தீப்பிடித்து எரிந்து சேதமானது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு விலிருந்து நேற்று காலை அம்மாநில அரசுப் பேருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 50 பயணிகள் இருந்தனர். ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே சிக்காரிமேடு அருகே பேருந்து வந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணகிரியை அடுத்த ஒட்டூரைச் சேர்ந்த ராணுவ வீரர் சுந்தரேசன் (38), விவசாயி கணேசன்(35) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கி பெட்ரோல் டேங்க் உரசியதில் பெட்ரோல் கசிந்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் பேருந்தின் படிக்கட்டு, ஜன்னல் மற்றும் முன்புற, பின்புற கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்தனர். இதில், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள்யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்து அங்கு சென்ற குருபரப்பள்ளி போலீஸார் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் பேருந்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில், பேருந்து 80 சதவீதம் எரிந்து சேதமானது. விபத்தால், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.தொடர்ந்து, போலீஸார் விபத்துக்குள்ளான பேருந்து, இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
முன்னதாக உயிரிழந்த சுந்தரேசன், கணேசன் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.